உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           இனைத்திறம் பகருறு மெந்தையொ டென்னிடைக்
          கிளைத்திறம் பகருநர் தலைப்பெய லரிதெனக்
          கண்ணினுஞ் செவியினு நண்ணுநர்ப் போற்றி
          மண்ணகங் காவலன் மாபெருந் தேவி
     145   திருவயிற் றியன்ற பெருவிறற் பொலிவே
          இனையை யாவது மெம்மனோர் வினையென
          யாக்கைய தியல்பினு மனபினுங் கொண்டதன்
          காட்சிக் கண்ணீர் கரந்தகத் தடக்கி
 
              ( இதுவுமது )
        141 - 148 : இனைத்திறம்..........அடக்கி
 
(பொழிப்புரை) வாசவதத்தையின் மனக்கோளாகிய இச் செய்திகளை இவனோடு பேசி அளவளாவும் பொழுது இவனோடும் என்னோடும் உறவுத்தன்மை கொண்டாடிப் பேசுவோரும் ஈண்டு வருதல் அரிதாகும் என்று துணிந்தும் மேலும் கண்ணாற் பார்த்தும் செவியால் ஓசையை ஓர்ந்தும் ஆங்கு வருவோர் உளரோ என்று ஆராய்ந்து யாவரும் வாராமையை விழிப்புடன் அறிந்து கொண்ட பின்னர் உதயணகுமரனை நோக்கி, 'உலகங் காக்கும் மன்னர் பெருமான் சதானிகரும் கோப்பெருந்தேவி மிருகாபதியும் செய்த தவப்பயனாக அவர்தம் திருவயிற்றிற் றோன்றிய பெரிய வெற்றியையும் பொலிவினையும் உடைய பெரு மானே! நீ இவ்வாறு வேற்றரசன் சிறையிடைப்பட்டு இத்தன்மை யுடையை ஆவதற்குக் காரணம் எம்மனோர் செய்த தீவினையே காண்!' என்று இரங்கிப் பெண்ணாகிய தனது பிறப்பு இயல்பானும் அவன்பாற் கொண்ட பேரன்பின் இயல்பானும் பிறர் காட்சிக்குப் புலப்படத் தோன்றிய கண்ணீரைப் பிறர்காணாதபடி மறைத்து அடக்கிக் கொண்டென்க.
 
(விளக்கம்) இனைத்திறம் என்றது, வாசவதத்தையின் கொள்கை முதலிய அருமறைகளாகிய திறங்கள் என்றவாறு. அருமறை வெளிப் படுத்துரைக்கக் கருதுதலான் கேளிர் வாராவிடம் தேடினள். பின்னும் அயலாரும் வாராதபடி பார்த்தனள் என்க. செவியால் ஒர்தல் வருவோர் மொழி அடியோசை முதலியவற்றை ஒர்தல் என்க. இனையை என்றது மாற்றான் வயப்பட்டு இத்தன்மையுடையை என்றவாறு. நல்ல அரசன் ஒருவனுக்குக் கேடுவருதற்குக் காரணம் அவனுடைய குடிமக்கள் செய்த தீவினையும் ஆதல் கூடும் ஆகலான் இனையையாவது எம்மனோர் வினை என்றாள். வினை ஈண்டுத் தீவினை யென்க. இனிச் சீவகனை நோக்கி 'இனையைநீ ஆயதெல்லாம் எம்மனோர் செய்த பாவம்' என்று அச்சணந்தியாசிரியன் கூறுதலும் காண்க. (சீவகசிந் - 391) யாக்கை - பெண்யாக்கை - பெண்டிர்க்கு அழுவது இயல்பு என்பது பற்றி சாங்கியத்தாயும் பெண்ணே ஆகலின் கண்ணிர் வெளிப்பட்டது என்றவாறு. இனி அவள் உதயணன்பாற் பேரன்புடையளாகலின் அவளன்பின் இயல்பானும் கண்ணீர் வெளிப்பட்டதென்பார் (அன்பினும்) என்றார். 'அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர், புன்கணீர் பூசல் தரும்' எனவரும் திருக்குறளும் (71.) நினைக.