உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           இன்ன ளென்றியா னென்முத லூரைப்பேன்
     150   மன்னவன் மகனே மனத்திற் கொள்ளெனச்
          செம்மற் செங்கோ னுந்தை யவையத்
          தென்னிகந் தொரீஇயின னிளமையிற் கணவன்
          தன்னிகந் தொரீஇயான் றகேஎ னாகக்
          கொண்டோற் பிழைத்த தண்டந் தூக்கி
 
           ( சாங்கியத்தாய் தன் வரலாறு கூறுதல் )
             149 - 154: இன்னள்..........தூக்கிப்
 
(பொழிப்புரை) 'மன்னவன் மகனே! இப்பொழுது நீ என்னை நன்கு அறிவாயல்லை ஆகலின் யான் யார் என்பதனை நீ அறியும் பொருட்டு யானே என் வரலாற்றைக் கூறுவேன். கேட்டுத் திருவுளங் கொண்டருள்க. என் இளம்பருவத்தே என்கணவன் என்னைத் தனியே விட்டுப் போய்விட்ட காரணத்தால் யானும் அவனை விட்டு என்மனம்போல் ஓழுகி இல்வாழ்க்கைக்கு ஒவ்வாதேன் ஆகிவிட்டமையால் தலைமை சான்ற செங்கோன்மையுடைய நின் தந்தையாகிய சதானிக மன்னர் அரசவைக்கண் கணவனுக்குப் பிழை செய்தமையாலுண்டாகும் தண்டனையை ஆராய்ந்தென்க.
 
(விளக்கம்) இடம் காலம் உருவம் ஒழுக்கம் முதலியன பெரிதும் மாறுபட்டிருத்தலான் இவன் பண்டு அறிவுடையோன் எனினும் இப்பொழுது என்னை அறிந்து கோடல் அரிது ஆகலான் யானே என்னை இன்னள் என்று அறிவிப்பேன் என்பது கருத்து. மனத்திற் கொள்ளென்றாள். தான் கூறப்போகும் செய்திகள் அருமறைச் செய்திகள்; அவை இப்பொழுது பிறர்க்குத் தெரிதல் கூடாதென்றற்கு, செம்மல் - தலைமைத் தன்மை. உந்தை என்றது சதானிக மன்னனை. என்னிகந் தொரீ இயினன் ஆகலான் யானும் தன் இகந்தொரீஇ என்க. தன் இகந் தொருவுதல் - அறத்தினில்லாது மனம் போனவாறு ஒழுகுதல். தகேன் ஆக என்றது கற்புடைமையை இழந்துவிட்டேன் என்றவாறு. கொண்டோனைப் பிழைத்ததற்குரிய தண்டனையை ஆராய்ந்து என்க.