உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           புனற்கரைப் படீஇயர் புதல்வரொ டார்க்கும்
          தோணி யரவஞ் சேணோய்க் கிசைப்பத்
          தழூஉப்புணை யாயமொடு குழூஉத்திரை மண்டி
     165   ஆவி நுண்டுகில் யாப்புறுத் தசைத்துப்
          பாகவெண் மதியிற் பதித்த குடுமிக்
          களிற்றொடு புக்குக் கயங்கண் போழ்வோய்
          அவ்வயி னெழுந்த கவ்வை யென்னென
 
                  (இதுவுமது)
            162 - 168 : புனல்..........என்னென
 
(பொழிப்புரை) என்னை ஏற்றிய தோணியியங்கிய பொழுது அந்த யமுனை யாற்றங்கரைக்கண் இந்நிகழ்ச்சியைக் காண்டற்கு வந்து குழுமிய மாந்தர் இளஞ்சிறாரொடு ஆரவாரிக்கும் ஆரவாரம் அவ்விடத்தினின்றுந் தொலைவின்கண் இருந்த நின் செவியின்கண் புக்கதாக, அவ்வமயம் பாலாவி போன்ற நுண்ணிய வெள்ளிய துகிலிலிட்டுக் கட்டி வைத்த தோட்டியினையுடைய மத்தகத்தையுடைய யானையோடு நீர் விளையாடுமாற்றால் அப்பேரியாற்றின் மடுக்களை ஊடறுத்துச் செல்லுகின்ற நீ ஆங்கு எழுந்த ஆரவாரம் என்கொலோ? என்று அண்மையினின்றோரை வினவா நிற்ப என்க.
 
(விளக்கம்) புனற்கரைப்படீஇயர் - நீர்க்கரையிலுள்ளவர். புதல்வர் என்றது சிறாஅர் என்னும் பொருட்டாய் நின்றது. தன்னை யமுனையிற்றள்ளுதற்கு ஏற்றிய தோணியியங்கியவுடன் ஆரவாரம் உண்டாயிற்று என்றவாறு. பாகவெண்மதி என்றது தோட்டியை. கண் போழ்தல் - ஊடறுத்துச் செல்லுதல். என்னென்று அயனின்றாரை வினவ என்க. கவ்வை - ஆரவாரம்: துன்பமுமாம்.