உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           இதுமுத லாக வின்னே யிம்மகள்
          அழிதவப் படுத லாற்றுமென் றுரைத்த
          குறிகோ ளாள னறிவிகழ்ந் தெள்ளி
          எல்லை ஞாயி றிரவெழு மெனினும்
     180   பல்கதிர்த் திங்கள் பகல்படு மெனினுநின்
          சொல்வரைத் தாயிற் சொல்லுவை நீயென
          இன்னகை முறுவலை யாகி யிருங்களிற்
          றொண்ணுதன் மத்தகத் தூன்றிய கையை
 
                 (இதுவுமது)
           176 - 183 : இதுமுதலாக..........கையை
 
(பொழிப்புரை) ஆங்குநின்ற நிமித்திகன் ஒருவன் 'இந்நிகழ்ச்சியைத் தலைக்கீடாகக் கொண்டு, இப்பொழுதே இப்பார்ப்பன மகள் தவம் சிதைந்தோர் அதற்குய்தியாக இயற்றும் விரதத்தை மேற்கொள்ளுவள்,' என்று கூறாநிற்ப, அது கேட்ட நீ ''பேதாய்! நீ பகற்பொழுதிற்குரிய ஞாயிற்று மண்டிலம் இரவின்கண் எழுமென்று கூறினும், அல்லது பலவாகிய கதிர்களையுடைய முழுத்திங்கள் பகற்பொழுதிலே தோன்றும் என்று கூறினும் நாணாயாய் நின் சொல்லளவிலே சொல்லுவைகாண்'' என்று அவனுடைய அடக்கமற்ற அறிவினை இகழ்ந்து எள்ளிய இனிய நகையாகிய புன்முறுவல் பூத்தனையாய்! பெரிய நெற்றியையுடைய களிற்று யானையின் மத்தகத்தின்கண் ஊன்றிய கையையுடையையாய் இருந்து என்க.
 
(விளக்கம்) முதல் - காரணம். அழிதவப் படுதல் - தவஞ்சிதைந்தோர் செய்தற்குரிய விரதம். குறிகோளாளன் - நிமித்திகன். இகழ்ந்தெள்ளி - மிகவும் இகழ்ந்தென்க. ஒருபொழுதும் நிகழக்கூடாததனையும் நீ நி்கழப் போவதாகக் கூறுவை என்றிகழ்ந்தபடியாம். எல்லை - பகல்.