உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           கொண்டோன் கரப்பவுங் கொள்கையி னிகப்போன்
     185   தன்குறிப் பாயுழித் தவமிவட் கெளிதென
          வம்ப மாக்கள் வாயெடுத் துரைத்த
          வெஞ்சொற் கிளவிநின் னங்கையி னவித்து
          வேண்டிய துரைமி னீண்டியான் றருகெனப்
          புலைமக னறையப் பூசலிற் போந்தேன்
     190   நிலைமை வேண்டியா னின்னகர் வாழ்வேன்
          தலைமகன் மகனே தவமென் றுணிவென
          நிகழ்வதை யுரைக்கு நிமித்திக் கஞரறப்
          புகழ்வினை யாகிப் பூக்கொண் டெறிந்தபின்
 
                  (இதுவுமது)
          184 - 193 : கொண்டோன்..........எறிந்தபின்
 
(பொழிப்புரை) அக்கூட்டத்தின்கண் நின்ற ஏதிலர் தன் கணவன் காணாமற் போகவும் தன் கற்புடைமையின் நீங்கிய இழிகுணமுடைய இவளுடைய கருத்தினை ஆராயின் இவட்குத் தவம் எளிதே போலும்! என்று இகழ்ந்து வாய்விட்டுரைத்த வெவ்விய சொல்லாகிய மொழியை நின் அழகிய கையாலவித்து என்னை நோக்கி ''அம்மையீர்! நீயிர் விரும்பியதனைக் கேட்பீராக இவ்விடத்தேயே யான் வழங்குவேன்'' என்று அறிவித்தனையாக; அதுகேட்ட யான் ''மன்னவன் மகனே! நின்னகரத்தே வாழ்வேனாகிய யான் தீயநிலையினையடைந்து அதன் பயனாக நெய்தற்புலைமகன் ஊர்முழுதும் பறையறைந்து அறிவிப்ப இவ்வாறு ஆரவாரமுண்டாக வந்தேன். இனியேனும் நல்லதொரு நிலைமையை எய்தவிரும்பி நற்றவஞ் செய்தலே என் துணிவாகும்'' என்று கூறினேன்; அதுகேட்ட நீ இனி நிகழப்போவதைக் கண்டுரைக்கும் தன்மையுடைய அந்த நிமித்திகனைப் பாராட்டி அவனது துன்பம் அகலும்படி பரிசிலாக அவனுக்குப் பொன்னாலியன்ற பூவினை வழங்கினை; வழங்கிய பின்னர் என்க.
 
(விளக்கம்) கொண்டோன் - கணவன். கொள்கை - கற்பு, தவம் இவட்கு எளிது என்றது இகழ்ச்சி. இக்கீழ்மகள் தவத்தின்கண் நில்லாள் என்பது குறிப்பு. முன்னர்த் தன்னாலிகழப்பட்ட நிமித்திகன் கருத்தே இவள் கருத்துமாதல் கண்டு அவனைப் பாராட்டினன் என்பது கருத்து. இந்நிகழ்ச்சி
உதயணனுடைய சிறந்த சான்றாண்மையை விளக்கும். என்னை?
    'சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
    துலையல்லார் கண்ணுங் கொளல்' (குறள் - 986)

என்ப வாகலான் என்க.