உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           மற்று மவனே கற்றது நோக்கி
    195    யானை யணிநிழற் படுதலி னந்தணி
          தான்கொண் டெழுந்த தவத்துறை நீங்கித்
          தானை வேந்தன் றாணிழற் றங்கி
          முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமெனச்
          செவ்வகை யுணர்ந்தோன் சேனைக் கணிமகன்
    200   கோசிக னென்றவன் குறிப்பெயர் கூறி
          அடையாண் கிளவியொ டறியக் கூறலும்ின்
 
                  (இதுவுமது)
           194 - 201 : மற்றும்..........அறியக்கூறலும்
 
(பொழிப்புரை) அங்ஙனம் நின்பாற் பாராட்டும், பரிசிலும் பெற்ற அந்த நிமித்திகனே மீண்டும் தான் கற்றுள்ள நிமித்த நூற்பொருளை நுண்ணிதின் ஆராய்ந்து ''மன்னவன் மகனே இப் பார்ப்பனி இப்பொழுது நினது களிற்று யானையின் அழகிய நிழலிலே நிற்றலாலே இனி இவள் இப்பொழுது மேற்கொண்டு செல்லும் தவநெறியினின்றும் பின்னொருகாலத்தே நீங்கிப் படைப் பெருக்கமுடைய ஓர் அரசன் ஆதரவுபெற்று அவன் அரண்மனையிற்றங்கி அவ்வரண்மனைக்கண் வாழும் நிறைந்த அணிகலன் அணிந்த மகளிர்க்குப் பாதுகாப்பாக அமைகுவன் காண்'' என்றும் கூறினன். இங்ஙனம் நிமித்தத்தைச் செவ்வனே அறிந்து கூறியவன் நின் சேனையின் உள்ள நிமித்திகனாகிய கோசிகன் என்றும், அவனுடைய இடுகுறிப் பெயரையும் கூறி அடையாளச் சொற்களோடு இங்ஙனம் சாங்கியத்தாய் தன்னை உதயணன் நன்கு அறிந்துகொள்ளும்படி கூறா நின்றனள். அவள் இங்ஙனம் கூறக்கேட்டபொழுது என்க.
 
(விளக்கம்) அவனே - முற்கூறிய அந்நிமித்திகனே. யானையின் நிழலில் நிற்றலை ஏதுவாகக் கொண்டு இவ்வாறு கூறினன் என்பது கருத்து. யானை நிழலில் நிற்றலால் இவள் மற்றொரு மன்னன் தாணிழலில் வாழ்வள் என்றவாறு. முற்றிழை - நிறைந்த அணிகலன். முதுகண் - பாதுகாப்பு. கூறினன் என ஒருசொல் வருவித்துக்கொள்க. அடையாண் கிளவி - அடையாளச்சொல். உதயணன் அறியக் கூறலும் என்க.