உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
         
      225   பூதியு மண்ணும் பொத்தகக் கட்டும்
           மானுரி மடியு மந்திரக் கலப்பையும்
           கானெடு மணையுங் கட்டுறுத் தியாத்த
           கூறை வெள்ளுறிக் குண்டிகைக் காவினர்
           தரும தருக்கர் தற்புறஞ் சூழப்
     230   பரிபு மெலிந்த படிவப் பண்டிதன்
           சாங்கிய நுனித்தவோர் சாறயர் முனிவனை
           ஆங்கெதிர்ப் பட்டாங் கவனொடும் போகி்
 
                  (இதுவுமது)
             225 - 232 : பூதியும்..........போகி
 
(பொழிப்புரை) விபூதியும் மண்ணும் சுவடிக்கட்டும் மான்றோல் ஆடையும் மந்திரத்திற்குரிய கருவிகள் இட்ட பையும் கால்களையுடைய நெடிய மணைப்பலகையும் மூடையில் வைத்துக்காட்டிய பிற ஆடையும் வெளிய நூலானியன்ற உறியிலிட்ட குண்டிகையும் தோளிலே சுமந்தவராகிய அறக்கேள்வியாளராகிய மாணவர் தன்னைப் புறஞ் சூழ்ந்து வாராநிற்பத் தவத்தான் வருந்தி மெலிந்த உருவத்தை யுடையவனும், கற்றுத்துறை போகிய புலமையோனும், சாங்கிய சமயத்தை நுனித்துணர்ந்தவனும், அச்சமய விழாவினை நிகழ்த்துபவனும் ஆகிய ஒரு துறவோன் வருதலைக்கண்டு அவ்விடத்திலேயே அப்பெரியோனை எதிர்கொண்டு வணங்கி அத்துறவோனோடு கூடிச் சென்று என்க.
 
(விளக்கம்) பூதி - விபூதி. மண் - திருமண். இவை நெற்றியிலிடுவன என்க. மானுரிமடி - மான்றோலாகிய ஆடை. மந்திரக்கலம் இட்டபை என்க. கூறை - ஆடை, வெளிய நூலானாகிய உறியென்க. தருமதருக்கர் - அறங்கேட்கும் மாணவர். பரிபு - வருந்தி. சாங்கியம் - ஒரு வகைச் சமயம், சாறு - விழா.