உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           மற்றவள் வினவவும் பற்றிய தவிழான்
          பண்டறி வுண்டெனப் பகைநிலத் துறைந்த
          பெண்டிரைத் தெளிந்து பெருமறை யுரைத்தல்
    290   நுண்டுறை யாளர் நூலொழுக் கன்றெனத்
          தேறாத் தெளிவோடு கூறா தடக்கி
          மாயமென் றஞ்சின் மற்றிது முடிக்கும்
          வாயி லில்லென வலித்தனன் றுணிந்து
          தாய்முத லிருந்துதன் னோய்முத லுரைப்ப்
 
                  (உதயணன் செயல்)
                287 - 294 : மற்றவள்..........முதலுரைப்ப
 
(பொழிப்புரை) இவ்வாறு சாங்கியத்தாய் வினவாநிற்பவும் பண்டைக் காலத்தே ஒருவரையொருவர் அறிந்ததுண்டு என்னும் ஏதுவினாலேயே பல்லாண்டு பகைவர் நாட்டிலே வதிந்த பெண்டிரைத் தெளிந்து பெரிய அரிய மறைச் செய்தியைக் கூறுதல் நுண்ணிய துறைகளையுடையோர் நூலுக்கு ஏற்ப ஒழுகும் ஒழுக்கம் ஆகாது; என்று கருதி ஒருவகையால் தெளிந்தும் மற்றொரு வகையாற் றெளியாதும் குழப்பமெய்தித் தன் மனம்பற்றிய மறைச் செய்தியை வெளிப்படுத்திக் கூறாமலே தன்னுளடக்கிக் கொண்டு, பின்னரும் இவள் கூற்று ஒரோவழி வஞ்சமுடையதாகவுங் கூடும், என்று அஞ்சினால் இந்தக் காரியத்தை முடிப்பதற்கு வேறு துணையும் இல்லையே என்று கருதி ஒருவாறு துணிந்து தான் வாசவதத்தைபாற் கொண்டுள்ள காமம் ஆகிய தனது துன்பத்தின் காரணத்தை அச்சாங்கியத்தாயின் முன்னிலையிலேயே வெளிப்படுத்திக் கூறா நிற்ப என்க.
 
(விளக்கம்) அவள் - சாங்கியத்தாய். பற்றியது - உட்கொண்ட மறைச் செய்தி. பண்டு அறிவுடையார் ஆடவரேயாயினும் பகை நிலத்துறைந்தவழி அருமறை கூறல் கூடாது. இவளோ பெண் ஆதலின் இவள்பாற் கூறுதல் பெருங்கேடு பயத்தல் கூடும் என்பது கருத்து. துறை - அரசியற்றுறை. நூலொழுக்கு - நூலினுக்கேற்ற ஒழுக்கம். தேறாத் தெளிவு - ஒருவாற்றாற்றெளிந்தும் ஒருவாற்றாற்றெளியாமை. மாயம் - வஞ்சம். வாயில் - துணை. தாய் - சாங்கியத்தாய். நோய்முதல் என்றது தான் வாசவதத்தையைப் பெரிதும் காமுறுவதனை.