உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
36. சாங்கித்தாயுரை |
|
295 ஒள்ளிழை கணவனு முரிமையுட்
டெளிந்த
கொள்கை யறிந்தியான் கூறவும்
வேண்டா
அருமறை யன்மையி னன்பிற்
காட்டி
ஒருவயி னொண்டொடிக் குற்றது
கேளென
ஏதின் மன்னர் தூதுவ மாக்கள்
300 வந்தது வடுவெனத் தந்தையோ
டூடி அறத்தா
றன்றியு மாகுவ
தாயின்
துறத்தல் வேண்டுந் தூய்மை
யோற்கெனத்
துணிவுள் ளுறுத்த முனிவின ளாகி
|
|
(சாங்கியத்தாய்
கூற்று)
295 - 303 : ஒள்ளிழை...........முனிவினளாகி
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட
சாங்கியத்தாய். ''கொற்றவன் மகனே! கோப்பெருந் தேவியின் கணவனாகிய
பிரச்சோதன மன்னன் தன் தேவிமார் குழுவினுள்ளிருந்து ஆராய்ந்து துணிந்த
கொள்கை யாவரும் அறிந்த செய்தியே; அரிய மறைச் செய்தியல்லாமையின்
அதனை யான் அறிந்து நினக்குக் கூறவேண்டாவன்றே!'' என்று அன்புடைமையாலே
அவன் வேற்றரசர் மக்களுள் ஒருவனுக்கு வாசவதத்தையை வழங்க முயலும்
முயற்சியை உதயணனுக்குத் தெரிவித்துப் பின்னர் 'அரசே! இனி
வாசவதத்தைக்கு ஒருபால் நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறுவேன். கேட்டருள்க!
அயல் நாட்டு மன்னர் விடுத்த தூதுவர்கள் மகட்பேசித் தன் தந்தையின்பால்
வந்ததே தனக்கொரு பழியாகும் என்று உட் கொண்டு, அவள் பெரிதும் நாணி,
அத்தூதுவரை ஏற்றலும் உபசரித்தலும் செய்த தன் தந்தையோடு ஊடிக் கொண்டு,
தன் தந்தையின் செயல் அறத்துவழிப்பட்ட தன்று; அங்ஙனமே நிகழ்த்த
முனையின் தூய உதயணன் பொருட்டு யான் உயிர்நீத்தல் ஒருதலை என்று துணிநத
துணிவோடு தந்தையின்பால் வெறுப்புடையளாகி, என்க.
|
|
(விளக்கம்) ஒள்ளிழை -
கோப்பெருந்தேவி. கணவன் - பிரச்சோதனன். உரிமையுட்டெளிந்த கொள்கை
யென்றது, வாசவதத்தையைத் தக்கான் ஒருவனுக்க மணஞ் செய்வித்தல் வேண்டும்
என்னும் கருத்தினை. அக்கருத்துண்மை உலகம் அறிதலின் அருமறையன்மையின் யான்
உனக்குக் கூறல் மிகை என்றவாறு. ஒருவயின் - ஒரு பக்கத்தே. ஒரு பக்கத்தே
அரசன் இன்னது செய்ய மற்றொரு பக்கத்தே வாசவதத்தையின் திறத்திலே
இவ்வாறு நிகழ்ந்தது என்றவாறு. வடு - பழி. ஊடி -
பிணங்கி. தூய்மையோற்கு - உதயணன் பொருட்டு. அறத்தாறு - என்றது, தான்
காதலித்த தலைவனுக்குத் தன்னை வழங்குதல்.
|