உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           அவன்வயி னீங்கி யாயங் கூஉய்
          மகள்வயிற் புக்கு மம்மர்நோய் நீக்கி
    350   நல்லோள் கற்கு நாழிகை யிறந்தன
          வல்லோன் செல்கதன் வளநக ரத்தெனக்
          காஞ்சன மாலாய் காவலற் குரையென
          மணிப்படு மாடத்து வாயில் போந்தவள்
          பணித்த மாற்ற மணித்தகைக் குரைப்ப
 
        (சாங்கியத்தாய் உதயணனை நீங்கிக் காஞ்சனமாலையிடங் கூறல்)
                348 - 354 : அவன்..........உரைப்ப
 
(பொழிப்புரை) பின்னர்ச் சாங்கியத்தாய் உதயணன்பால் நீங்கிப் போய்த் தோழியரை அழைத்துக்கொண்டு சென்று வாசவதத்தையிடத்தை எய்தி அவளது மயக்கமாகிய நோயை அகற்றிக் காஞ்சன மாலையை நோக்கி 'காஞ்சன மாலாய்! நீ சென்று உதயணனிடம் வாசவதத்தை கற்றற்குரிய பொழுது கழிந்தமையால் அவன் தனது வளமுடைய மாளிகைக்குச் செல்க என்று அவனுக்குக் கூறுவாயாக' என்று பணித்தலானே அக்காஞ்சனமாலை மணிகள் பதித்த கன்னிமாடத்து வாயிலிலே சென்று சாங்கியத்தாய் கூறிவிடுத்த செய்தியை அழகிய பெருந்தகையாகிய உதயணகுமரனுக்குக் கூறா நிற்றலால் என்க.
 
(விளக்கம்) அவன் - உதயணன். ஆயம் - தோழியர்திரள். மகள் - வாசவதத்தை. மம்மர் - மயக்கம். நல்லோள் - வாசவதத்தை. வல்லோன் - உதயணன். காஞ்சன மாலை - வாசவதத்தையின் உசாத்துணைத் தோழி. காவலன் - உதயணன். இஃது அவன் என்னும் சுட்டுப் பொருட்டாய் நின்றது. அணித்தகை : அன்மொழித்தொகை.