உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
         
     355   ஆர மார்பனும் போவன னெழுந்து
           கற்றில ளென்னுங் கவற்சி வேண்டா
           பற்றிய கேள்வியு முற்றிழை முற்றினள்
           குஞ்சர வேற்றுங் கொடித்தேர் வீதியும்
           பொங்குமயிர்ப் புரவியும் போர்ப்படைப் புணர்ப்பும்
     360   நீதியும் பிறவு மோதிய வெல்லாம்
           நம்பி குமரருந் தந்துறை முற்றினர்
 
           (உதயணன் செயல்)
       355 - 361 : ஆரமார்பனும்..........முற்றினர்
 
(பொழிப்புரை) அதுகேட்ட முத்துமாலையணிந்த உதயணகுமரனும் அவ்விடத்தினின்றுஞ் செல்ல எழுந்து காஞ்சன மாலையை நோக்கி, தோழி! வாசவதத்தை இற்றை நாள் யாழ் பயின்றிலளே என்று யாரும் கவலுதல் வேண்டா! அவள் மேற்கொண்ட யாழ்க் கேள்வியின்கண் நன்கு பயின்று முதிர்ந்தனள்காண்! இனி, சக்கரவர்த்தி புதல்வர்கள் தாமும் யானை ஏற்றமும், கொடியணிந்த தேரிலேறிச் செல்லும் செலவும், மிக்க பிடரிமயிரையுடைய குதிரைப் பயிற்சியும், போரியற்றும் வின்முதலிய படைப் பயிற்சியும் போர் அறங்களும் இன்னோரன்ன பிறவும் என்று கூறப்பட்ட எல்லாத் துறைகளையும் கற்றுத் தத்தம் துறையிலே நன்கு தேர்ச்சி யுற்றனர் என்க.
 
(விளக்கம்) ஆரம் - முத்துமாலை. கேள்வி - யாழ்க்கேள்வி. முற்றிழை: அன்மொழித்தொகை; வாசவதத்தை. குஞ்சரம் - யானை. வீதி: செலவு. புரவிப் பயிற்சியும் என்க. போர்ப்படை - படைக்கலம். நீதி போர் அறம். நம்பி - பிரச்சோதனன்.