உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           வல்லவை யெல்லாம் வில்லோன் மக்களை
          நல்லவை படுப்பது நாளை யாதலின்
          என்னறி யளவையி னொண்ணுதல் கொண்ட
    365   தைவரற் கியைந்த தான்பயில் வீணையைக்
          கையினுஞ் செவியினுஞ் செவ்விதிற் போற்றி
          ஆராய் கென்பது நேரிழைக் குரையென
          விசும்பா டூசல் வெள்வளைக் கியற்றிய
          பசும்பொன் னாகத்துப் பக்கம் பரந்த
    370   நறும்புகை முற்றத்து நம்பி நடக்கெனக்
          குறும்புழை போயினன் கோலவர் தொழவென்.
 
                  (இதுவுமது)
        362 - 371 : வல்லவை..........தொழவென்
 
(பொழிப்புரை) மேலும் 'வில் வேந்தன் மக்களாகிய இம்மாணவர்களை அவரவர் கற்றுவல்ல வித்தையை அரங்கேற்றுவிக்கும் நாளும் நாளையே ஆதலான், யான் அறிந்த அளவினாலே யான் பயிற்றுவிக்க வாசவதத்தை கற்றுக்கொண்ட தடவுதற்குப் பொருந்திய அவள் பயின்ற யாழினைக் கையானும் செவியானும் செவ்விதாகத் தானே பாடம் போற்றி ஆராய்க! என்னும் என் கூற்றை நேரிய அணிகலன்களையுடைய அவளுக்குக் கூறுவாயாக!' என்று கூற அதுகேட்ட காஞ்சனமாலை, 'பெருமான் வாசவதத்தையின் பொருட்டு இயற்றப்பட்ட வானத்தே இனிதினாடுகின்ற ஊசலையுடைய புதிய பொன்னாலியன்ற நாகமரத்தின் பக்கத்தே அமைந்த பரவிய நறுமணப் புகை கமழும் முற்றம் வழியே நடந்தருள்க' என்று கூறுதலாலே, அவ்வுதயணனும் அவ்வழிநடந்து சிறிய வாயிலில் நுழைந்து ஆண்டு நின்ற கோலையுடைய காவலர் கைதொழாநிற்பத் தனது
 
(விளக்கம்) வல்லவை - கற்றுவல்ல வித்தைகள். அவைப்படுப்பது - அரங்கேற்றும் நாள். ஒண்ணுதல் - வாசவதத்தை. தைவருதல் - தடவுதல். என்பது - என்று யான் கூறுமிதனை. நேரிழை - வாசவதத்தை. வெள்வளை - வாசவதத்தை. நாகம் - ஒரு மரம். நம்பி : முன்னிலைப் புறமொழி. குறும்புழை - சிறிய வாயில். கோலவர் . பிரப்பங்கோல் ஏந்திய காவலர்.

36. சாங்கியத்தாயுரை முற்றிற்று.