உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
         
     5    முரசுகடிப் பிகுத்த மூரி முற்றத்
          தரசிறை கொண்ட வகன்கண் வாரியுட்
          கையார் கடகத்துக் கதிர்வாட் கச்சையர்
          ஐயா யிரவ ரச குமரரொடு
          பொன்றலை யாத்த பொதியிற் பிரம்பின்
     10    வண்ணச் செங்கோல் வலவயிற் பிடித்த
          எண்ணூற் றறுவ ரிளங்கிடை காப்பரொடு
          புறஞ்சுற் றமைத்த பிறங்குகடைப் படுகால்
          நித்திலந் தொடரிய நிகரில்கம் மத்துச்
          சித்திரம் பயின்ற செம்பொன் விதானத்துச்
     15    சந்தனப் பீடிகைச் சார்வணை யேறிப்
          பன்மயிர்க் கவரியோடு பரிசனஞ் சுற்றப்
          பெருமக னிருந்த திருமலி யவையத்துக்
 
                    (இதுவுமது)
            5 - 17: முரசு..........அவையத்து
 
(பொழிப்புரை) முரசத்தைச் குறுந்தடிகொண்டு முழக்கிய பெரிய வாயிலின் மருங்கே அமைந்த வேற்றரசர் வந்து வதிதலையுடைய அகன்ற இடத்தையுடைய செண்டு வெளியின்கண் பெருமகனாகிய (17) பிரச்சோதனமன்னன் கையின்கட் பொருந்திய கிடுகுப்படையினையும், ஒளிவாளைக் கோத்துக் கட்டிய கச்சையினையும் உடையவராகிய ஐயாயிரவர் ஆகிய மன்னர் மக்களொடும் பொற்பூணைத் தலையிலே கட்டப்பட்ட பொதியமலைப் பிரம்பாகிய வண்ணந்தீற்றிய சிவந்த கோலினை வலப்பக்கத்தே பிடித்த எண்ணூற்றறுவராகிய இளமையுடைய கல்விச்சாலைக் காவலரொடும் புறத்தே சுற்றுச்சுவர் அமைந்ததும், விளங்காநின்ற வாயிலை யுடையதும்; படிக்கட்டுகள் அமைந்ததும், முத்துக் குஞ்சங்கள் தொடுக்கப் பட்டதும் ஒப்பற்ற தொழில் நுணுக்கமமைந்த ஓவியம் பொறிக்கப்பட்டதுமாகிய செம்பொன் பந்தரின்கண் இடப்பட்ட சார்வணையையுடைய சந்தன மரத்தாலியன்ற தவிசின்கண் பலவாகிய கவரிமயிராகிய சாமரையோடு தனது பரிசனம் சூழாநிற்ப வீற்றிருந்த அழகுமிக்க அவையின்கண்ணே என்க.
 
(விளக்கம்) பெருமகன் வாரியுள், குமரரொடும் காப்பரொடும், விதானத்து அணையேறிச் சுற்ற இருந்த அவையத்து என இயைக்க. வாரி - செண்டுவெளி. கடகம் - பரிசை. பொன் - பொற்பூண். பிறப்பு நலங்கூறுவார், பொதியிற் பிரம்பு என்றார், "தென்மலைப் பிறந்த பொன்மருள் சூரற் கருங்கண்தோறும் பசும்பொன் னேற்றி" எனப் பிறாண்டுங் கூறுவர். 1 : 40 - 375 - 6. கிடை - படைக்கலம் பயிலும் பள்ளி. கடை - வாயில். படுகால் - படிக்கட்டு. நித்திலம் - முத்து. கம்மம் - தொழில். விதானம் - பந்தர். சார்வணைச் சந்தனப்பீடிகை என மாறுக. பீடிகை, தவிசு, இருக்கை. பரிசனம் - ஏவன் மாக்கள். திரு - அழகு.