| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 37. விழாக் கொண்டது | 
|  | 
| தகைசால் 
      சிறப்பிற் றன்னொடு 
      நம்மிடைப் பகைமுத லாகப் பழிதர 
      வந்த
 செற்ற 
      நம்வயிற் கொள்ளான் 
      சிறந்த
 சுற்ற மாகச் சூழ்ச்சியின் விளக்கி
 60  
        நன்றுணர் விச்சை நம்பியர்க் 
      கருளி
 அன்புவழிப் படுத்த வரச 
      குமரற்குக்
 கைம்மா றிதுவெனக் கடவதி 
      னிறையும்
 செம்மா ணாற்றாச் சிறுமைய மாதலின்
 | 
|  | 
| (பிரச்சோதனன் 
      கூற்று) 56 
      - 63: தகை..........ஆதலின்
 | 
|  | 
| (பொழிப்புரை)  தகுதிமிக்க 
      சிறப்பினையுடைய இவ்வுதயணனுக்கும்   நமக்கும் இடையே உண்டான பகை காரணமாக 
      யாம்   இவனுக்கும் பழிச்சொல்லை உண்டாக்குதலானே நம் மேற்பிறந்த 
        உட்பகையினைச் சிறிதும் பாராட்டானாகித் தனது செயலாலே நமக்கு 
        இவன் சிறந்த கேண்மையுடையனாதலை விளக்கித் தான் நன்றாகக்   
      கற்றுணர்ந்த அரிய வித்தைகளை என் மைந்தர்க்கும் பயிற்றித் தனது   
      அன்பாலே நம்மைத் தன்வழிப்படுத்துக் கொண்ட இவ்வத்தவ வேந்தன்   மகனுக்கு 
      யாம் செய்யத்தகுந்த கைம்மாறுகளில் வைத்து இது தகுதியானது   என்று கூறத் 
      தகுந்ததனை யாம் ஒரு சிறிதும் செவ்விய சிறப்போடு   செய்ய வியலாத 
      சிறுமையுடையேம் ஆதலானே என்க. | 
|  | 
| (விளக்கம்)  தன் - 
      உதயணன். பகை காரணமாக நாம் பழியுண்டாக்க   என்க. பழி - பகைவர் 
      சிறைக்கோட்டம் புகுதல். சூழ்ச்சியின்   செயலால். விச்சை - வித்தை. 
      நம்பியர் - மக்கள். 'செய்யாமற் செய்த   வுதவிக்கு வையகமும், வானகமும் 
      ஆற்றல் அரிது' எனவும்,   'பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி, னன்மை 
      கடலிற் பெரிது'   எனவும் சான்றோர் கூறுவர். மற்று இவனோ நாம் பகைவர் 
      என்பதனையும்   கருதாது நன்றி செய்தனன் ஆதலால் இதற்குக் கைம்மாறும் உளதோ 
        என்று மன்னன் ஈண்டு மருள்கின்றனன் என்க. ஒருவாற்றான் இவனுக்கு 
        இக்கைம்மாறு செய்யலாம் என்று கூறத்தகுந்ததினும் சிறிதேனும் 
      செய்ய  மாட்டுவேம் அல்லேம் என்பது 
கருத்து. |