உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
            ஒன்பதின் கோடி யொண்பொருள் கொடுப்பினும்
     65    பண்பெனக் கொண்டிவன் பண்டஞ் செய்யான்
           நங்குடித் தலைமை யிங்கிவற் கியற்றி
           நாமிவன் குடைக்கீழ்க் காமுறக் கலந்திவன்
           வேண்டியது செய்யு மாண்பல திலமென
           மண்முத லிழந்தோற்கு மறுமன மழித்துத்
     70     தன்பதிப் புகுந்து தான்மணம் படுகெனக்
           குறையுறு கிளவி முறைபல பயிற்றிச்
           செயப்படு கருமஞ் செய்ந்நரோ டுசாஅய்
           முயற்சி யுள்ளமொடு முந்தவற் போக்கி
 
                  (இதுவுமது)
           64 - 73: ஒன்பதின்..........போக்கி
 
(பொழிப்புரை) யாம் ஒன்பதின் கோடி பொன்னை இவ்வுதயணனுக்கு வழங்கினும் அவைதாம் தன் தகுதிக்கு ஏற்கும் தன்மையுடையன என்று அவன் அவற்றைப் பொருளாக மதிப்பானுமல்லன். ஒரோவழி நம் அரசியற் குடியின் தலைமைத் தன்மையாகிய அரசுரிமையை இவனுக்கு வழங்கி யாமெல்லாம் இவன் குடையின்கீழ் இவன் விரும்பும்படி இவனோடு ஒன்றி இவன் விரும்பிய செயலைச் செய்கின்றதொரு சிறப்பைச் செய்வதாயின் செய்யக்கூடும். இச்சிறப்பும் இவ்வுதவிக்குக் கைம்மாறும் ஆகமாட்டாது என்றும் இதனினும் சிறந்த கைம்மாறு வேறு காண்கின்றோமும் இலம் என்றும் கருதிப் பிரச்சோதன மன்னன் இனித், தனது நாட்டினை இழந்திருக்கின்ற இவனுக்கு நம்பால் மாறுபட்ட நெஞ்சத்தை மாற்றி இவனுக்குரிய நாட்டிற் புகுந்து இவன் திருமணமும் செய்துகொண்டு வாழுமாறு இவன்பால் குறையிரந்து அங்ஙனம் ஆதற்குச் செய்யவேண்டிய காரியங்களை அச்செயலாளரோடு வினாவி அதற்கு முயலும் முயற்சியையும் கருதியவனாய் முதற்கண் உதயணகுமரனை அவன் மாளிகைக்குப் போக்கிய பின்னர் என்க.
 
(விளக்கம்) ஒன்பதின் கோடி - என்றது மிகுதிக்கு ஓரெண் குறித்தபடியாம். எத்துணைப் பொருள் கொடுப்பினும் என்பது கருத்து. பண்பு - தன்மை. பண்டம் - பொருள். தன்பதி - வத்தவனாடு; கோசம்பி நகரமுமாம். உசாவி அதற்கென முயலும் முயற்சியையுடைய உள்ளத்தோடு என்க. அவன் - உதயணனை.