உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
           அவைக்கள மெழுந்து குவைக்களம் புக்குக்
   75    குலமகள் பயந்த குடிகெழு குமரர்
         நிலமக ணயக்கு நீதிய ராகி
         வெறுமை நீங்கினர் விச்சையி னமைந்தெனத்
         திருநுத லாயத்துத் தேவியர் நடுவட்
         பெற்ற நாளினும் பெரும்பூட் புதல்வரைக்
   80    கற்ற நாள்வயிற் கலிசிறந் துரைஇ
         மகிழ்ச்சிக் கிளவி மழையென விசைப்ப
 
        (பிரச்சோதனன் உவளகம் புகுந்து தேவியர்பாற் கூறல)்
                  74 - 81: அவை..........இசைப்ப
 
(பொழிப்புரை) அவ்வவையினின்றும் அகன்று மகளிர் குழுமிய உவளகத்தே புகுந்து, அழகிய நுதலையுடைய தோழியர் கூட்டத்திருந்த தேவிமார் நாப்பண் வீற்றிருந்து, 'பெருந்தேவி ஈன்ற நங்குடிக்குப் பொருந்திய நம் மைந்தர்கள் உதயணன்பால் வித்தை பயின்று அறியாமை நீங்கியவராய் நிலமகளும் விரும்புதற்குரிய அறவோர் ஆயினர்' என்று பேரணிகலன்களையுடைய அம்மக்களை அப்பெருந்தேவி ஈன்ற நாளினுங் காட்டில் அவர் வித்தை யரங்கேறிய இற்றை நாளில் பெரிதும் உவகை மிக்கவனாய்க் கூறி, இன்னோரன்ன உவகை மொழிகளை மழை பொழிவது போன்று பின்னரும் கூறாநிற்புழி என்க.
 
(விளக்கம்) குவைக்களம் - மகளிர் குழுமிய உவளகம். குலமகள் என்றது கோப்பெருந்தேவியை. நீதி - அறம். வெறுமை - அறியாமை. பெற்றநாளிற் கணவர் உவத்தலை 'கணவர் உவப்பப் புதல்வர்ப் பயந்து' என்பதனானும் (மதுரைக் - 400)

    'மற்ற வன்சொன்ன வாசகங் கேட்டலும் மகனைப்
    பெற்ற வன்றினும் பிஞ்ஞகன் பிடித்தவப் பெருவில்
    இற்ற வன்றினும் எறிமழு வாளவன் இழுக்கம்
    உற்ற வன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்'

எனவரும் இராமாவதாரத்தனும் (மந்திரப் - 42) உணர்க. கலி - தழைத்தல் - ஈண்டு உவகை மேற்று.