உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
            துகிர்த்துலா மண்டபத் தகிற்புகை கமழக்
           கண்டங் குத்திய மண்டப வெழினியுட்
           டாயுறை வியனகர்த் தமர்பா ராட்ட
     105    ஆயஞ் சுற்ற வணியிழை புகுதந்
           தொலிபெறு கீதத் தோதை போகிய
           பலிகெழு நல்யாழ் பாங்குறத் தழீஇக்
           கின்னர கீதத்துக் கேள்வி மாந்தர்
           முன்னுற நின்று மூதறி செவிலிநும்
     110    மகண்மா ணாக்கி வணங்கு நும்மென
           அவைப்பரி சாரங் கடத்துளிப் போக்கி
 
        (வாசவதத்தையின் யாழரங்கேற்றம்)
            102 - 111: துகிர்...........போக்கி
 
(பொழிப்புரை) அவ்வவை மன்றத்தின் ஒரு பக்கத்தே அமைத்த பவளத்துலாமுடைய மண்டபத்தின்கண், அகிலினது நறுமணப்புகை கமழா நிற்பப் பல்வேறு கூறுபடப் பல்வேறு வண்ணந் தோய்த்த கண்டத் திரைச்சீலையாலாய மண்டபமாகிய கோப்பெருந்தேவி முதலிய தாய்மார்கள் வதிகின்ற அகன்ற படவீட்டின்கண் சுற்றத்தார் தன்னைப் பாராட்டாநிற்பவும், தோழியர் சூழாநிற்பவும் அழகிய அணிகலன்கள் அணிந்த வாசவதத்தை புகுந்து, இன்னோசையுடைய பண்ணொலி முதிர்ந்ததும், பலியூட்டி வணங்கப் பட்டதும் ஆகிய நல்லிலக்கணமமைந்த தன் யாழினைப் பக்கத்தே பொருந்தத் தழுவிக்கொண்டு, கின்னரப் பறவைகள் கேட்டு வருதற்குரிய இனிய பண்களைக் கேட்டுக் கேட்டுப் பயின்ற சான்றோர் முன்னர் நின்று, பழைய மரபுணர்ந்த செவிலியாகிய சாங்கியத்தாய் அவையோரை நோக்கி நும்மகளாகிய மாணவி நும்மையெல்லாம் வணங்காநிற்கும் என்று அறிவித்தவுடன் முறைப்படியே அவ்வாசவதத்தை அவை வணக்கம் செய்து என்க.
 
(விளக்கம்) துகிர் - பவளம். துலாம் - மண்டபத்தின் ஓருறுப்பு. கண்டம் - கூறு. வண்ணங்களால் பல்வேறு கூறுபடுத்திய வண்ணத் திரைச்சீலை என்க. மண்டபவெழினி - எழினி மண்டபம். அஃதாவது திரைச்சீலையாலேயே வளைத்துக்கட்டிய படவீடு என்க. தாய் - கோப்பெருந்தேவி முதலியோர். வியனகர் - அகன்ற படவீடு. அணியிழை - வாசவதத்தை. புகுதந்து : ஒருசொல்; புகுந்து. ஓதை - ஓசை. பாங்கு - பக்கம். கின்னரகீதம் : கின்னரப்பறவை விரும்பி வருதற்கேற்ற உயரிய இசை. முது - பழைய மரபு. செவிலி - ஈண்டுச் சாங்கியத்தாய். நும்மகள் - நுங்கள் மகள். நும் - நும்மை. அவைப் பரிசாரம் - அவை வணக்கம். கடத்துளி - முறைப்படி.