|
உரை | | 1. உஞ்சைக்காண்டம் | | 37. விழாக் கொண்டது | | இயம்வெளிப் படுத்தபி னிசைவெளிப்
படீஇய
எரிமலர்ச் செவ்வா யெயிறுவெளிப் படாமைத்
120 திருமலர்த் தாமரைத் தேன்முரன்
றதுபோற்
பிறந்துழி யறியாப் பெற்றித்
தாகிச்
சிறந்தியம் பின்குரற் றெளிந்தவ
ணெழுவச்
சுருக்கியும் பெருக்கியும் வலித்து
நெகிழ்த்தும் குறுக்கியு
நீட்டியு நிறுப்புழி
நிறுத்தும் 125 மாத்திரை
கடவா மரபிற் றாகிக்
கொண்ட தானங் கண்டத்துப்
பகாமைப்
பனிவிசும் பியங்குநர் பாடோர்த்து
நிற்பக்
கனிகொ ளின்னிசைக் கடவுள்
வாழ்த்தித் தேவ
கீதமொடு தேசிகந் தொடர்ந்த
130 வேத வின்னிசைக் விளங்கிழை பாடத்
| |
(இதுவுமது) 118 - 130:
இசைவெளிப்படீஇய..........பாட
| | (பொழிப்புரை) அவள் தனது மிடற்றுப்பாடலின் சிறப்பை வெளிப்படுத்தத் தொடங்கித் தாமரை மலர் போன்று சிவந்த வாயின்கட் பற்கள் புறந்தோன்றாதபடி அழகிய தாமரை மலரின்கண் இருந்து வண்டு முரன்றாற் போன்று அவ்விசை பிறக்குமிடத்தை அவையோர் அறியவொண்ணாத தன்மையுடையதாய்ச் சிறந்து பாடாநின்ற இனிய மிடற்றுப் பாடலைத் தெளிவுடையதாய் அவ்விடத்தே எழுப்பி, அதனைச் சுருக்கவேண்டுங்காற் சுருக்கியும், பெருக்க வேண்டுங்காற் பெருக்கியும், வலிக்கும்வழி வலித்தும், நெகிழ்க்கும்வழி நெகிழ்த்தும் குறுக்கும்வழி குறுக்கியும் நீட்டும்வழி நீட்டியும், நிறுத்தும்வழி நிறுத்தியும், மாத்திரையில் மிகாத முறைமையுடையதாகவும் தான் மேற்கொண்ட சுதியினின்றும் தன் குரல் வேறாகாதபடியும், குளிர்ந்த வானத்தின்கண் இயங்கா நின்ற கந்தருவர் முதலியோர் தனது இசையின் பெருமையினைத் தம் செவியால் ஓர்ந்து இயக்கமின்றி அமைதி கொள்ளும்படியும், கேட்டோர் நெஞ்சத்தைக் கனியும்படி செய்யும் இனிய பண்புகளை முதற்கண் கடவுளை வாழ்த்திப் பின்னர்த் தேவகீதமும் தேசிகப்பண்ணோடு கூடிய சாமவேதமாகிய இனிய இசையையும் விளங்கிய அணிகலன்களையுடைய அவ்வாசவதத்தை பாடாநிற்ப என்க.
| | (விளக்கம்) இசை - ஈண்டு மிடற்றுப்பாடல். வெளிப்படீஇய - வெளிப்படுத்திக் காட்ட. எரிமலர் - தாமரை. தேன் - வண்டு. அவ்விசை பிறக்கும் இடம் இன்னதென்று அவையோர் அறியவொண்ணாதபடி என்க. இயம்பு இன்குரல் அவண் தெளிந்து எழுவ.
சுருக்குதல் முதலியன செயல்வகைகள். தானம் - சுதி. விசும்பியங்குநர் - கந்தருவர். முற்படக் கடவுளை வாழ்த்தி. தேசிகம் - ஓர்இசை. வேதம் - சாமவேதம். விளங்கிழை : அன்மொழித்தொகை.
|
|