உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
37. விழாக் கொண்டது |
|
புகழார்
வெய்திய திகழ்முடிச் சென்னியன்
150 ஆசில் பாட லமிழ்துறழ்
நல்யாழ்க் கேள்வி
நுனித்த கீத வித்தகத்
தாசா ரியரொ டரங்கியன்
மகளிரை ஏடுகோ
ளாள ரெனையரென் றெண்ணிப்
பேரெழுத் தோலை பெறுமுறை நோக்கிக்
155 கட்டுடைக் கலனுங் கதிர்முகத்
தாரமும்
பட்டியற் கலிங்கமொடு பாசிழை
நல்கி
இலைத்தொழிற் றடக்கைய ளெழுந்தீ கினியெனக்
|
|
(பிரச்சோதனன்
செயல்) 149
- 157 : புகழ்..........இனியென
|
|
(பொழிப்புரை) இவ்வாறு
பல்வேறு புகழ்களும் ஒருங்கு நிரம்பிய சிறப்பினை எய்தி விளங்குகின்ற
முடியணிந்த தலையினையுடைய பிரச்சோதனமன்னன் அப்பேரவையின்
கண்ணிருந்து குற்றமில்லாத பண்ணையுடைய அமிழ்தம் போன்ற சுவை கெழுமிய
நல்லிலக்கணமுடைய யாழ்ப்பாடலைத் தமது கேள்விச் சிறப்பாலே நுனித்து
ஆராய்ந்த இசைவித்தகமுடைய இசையாசிரியர்களையும் அரங்கிலே
ஆடுவாரும் பாடுவாருமாகிய இசையறி மகளிரையும் பனை யேட்டில் எழுதுங்கணக்கர்
இத்துணையர் என்று எண்ணி நிரலே அவர்தம் பெயரையும் எழுதித் தந்த ஓலையைத்
தான் பெறும் முறைமையாலே நோக்கி அவர்க்கெல்லாம் வரிசையறிந்து மணிகள்
பதித்த பேரணிகலங்களும் ஒளி முத்துமாலையும் பட்டாலியன்ற
ஆடையும் பசிய பிற அணிகலங்களும் ஆகிய இன்னோரன்ன சிறந்த பொருள்களை
வழங்கிய பின்னர் இலைவடிவம் இயற்றிய அணிகலனையுடைய பெரிய கையையுடைய
வாசவதத்தை இனி எழுந்து செல்க என்று பணித்தருளலாலே என்க.
|
|
(விளக்கம்) ஆசாரியர் -
இசையாசிரியர். அரங்கியல் மகளிர் பாணினியும் கூத்தியுமாகிய மகளிர்கள்.
ஏடுகோளாளர் - கணக்கர். பேரெழுத்தோலை - பெயர் பொறித்த ஓலை.
கட்டுடைக்கலன் - மணிகள் வைத்துக் கட்டிய அணிகலன்.
தடக்கையள் என்றது வாசவதத்தையை யாழரங் கேறினமை குறித்துத் தடக்கையள்
என அவள் கையைப் பாராட்டினன். எழுந்தீக : வினைத்திரி சொல்.
|