உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
37. விழாக் கொண்டது |
|
தண்ணுஞ்
சேனையுந் தகைக்கோ சம்பியும்
195 பண்டுகண் ணழிந்த பகையினை
நீக்கிப் பொன்னு
நெல்லும் புரிவின் வழங்குகென்
றொன்றெனப் பயிற்றி யுருமிடித்
தன்ன
வென்றி முரசம் வீதிதோ றெருக்கி
|
|
(இதுவுமது)
194 - 198: தண்...........எருக்கி
|
|
(பொழிப்புரை) குளிர்ந்த
உஞ்சை நகரத்தோரும் அழகிய கோசம்பி நகரத்தோரும் தொன்றுதொட்டுக்
கண்ணோட்டம் அழிந்து மேற்கொண்டிருந்த பகையினை நீக்கி ஒன்று
பட்டனர் ஆதலால் நகர்வாழ் மாந்தர் இரவலர்க்குப் பொன்னும்
நெல்லும் விரவி விருப்பத்தோடு வழங்குக என்றும் பலகாலும் கூறி இடி
முழங்கினாற்போன்று நம் வென்றி முரசத்தை வீதி தோறும் முழக்கச்
செய்ம்மின் என்றும் என்க.
|
|
(விளக்கம்) உஞ்சனை -
உஞ்சைநகரம் : ஆகுபெயர். கோசம்பி - உதயணன் தலைநகரம், இஃதும்
ஆகுபெயர். கண் - கண்ணோட்டம். அதற்கு அறிகுறியாகப் பொன்னும்
நெல்லும் விரவி வழங்கும்படி என்றவாறு. இரண்டு நாடு பகை
நீங்கி உறவு கொள்ளுங்கால் இங்ஙனம் பொன்னும் நெல்லும் வழங்குதல்
வழக்கம் என்பது பெற்றாம். எருக்கி - எருக்க. எருக்கச்
செய்தென்க.
|