உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
37. விழாக் கொண்டது |
|
210 எண்படைத் தலைவரு
மிருபிறப்
பாளரும் எண்பதி
னாயிர மிளம்பது
வாய்களும் ஏற்றினம்
வரூஉ நாற்றங் கழுமிய
மதங்கவுட் பிறந்த கதந்திகழ்
படாத்த
ஐந்நூ றியானையு மாயிரம் புரவியும்
215 எண்பது தேரு மிருவகைத்
தொறுவும்
நன்மணி யைம்பா னருமதை
யுள்ளுறுத்
திரங்குபொற் கிண்கிணி யரங்கிய
லாயத்து
நாடக மகளிர் நாலெண்
பதின்மரும்
கோடிய லூர்தியுங் கொண்டுவிசி யுறுத்துக்
220 கோடி விழுநிதி கொண்டகஞ்
செறிக்கப்
பாடியல் பண்டியொடு படைசெலல் விதித்து
|
|
(இதிவுமது)
210 - 221: எண்படை..........விதித்து
|
|
(பொழிப்புரை) எட்டுப் படைத்தலைவர்களும், அந்தணர்களும், எண்பதினாயிரம் இளமையுடைய பதுவாய்க் காவலரும் களிற்று யானைகளோடு கூடி வருகின்ற கவுளிடத்தே மணம் கமழும் மதநீர் தோன்றிய சினஞ்சிறந்த முகபடாத்தையுடைய ஐந்நூறு பெண் யானைகளும், ஆயிரம் குதிரைகளும், எண்பது தேர்களும்; ஆடும் மாடுமாகிய இருவகை நிரைகளும்; நல்ல நீலமணி போலும் நிறமுடைய கூந்தலையுடைய நருமதையை யுள்ளிட்ட முரலாநின்ற பொற் கிண்கிணியையுடைய அரங்கின்கண் ஏறி ஆடும் கூட்டமாகிய முந்நூற்றிருபது
நாடகக் கணிகையரும், யானை மருப்பாலியற்றிய சிவிகை முதலிய ஊர்திகளும், தம்முடன் கொண்டு மேலும் ஒரு கோடி சிறந்த பொன்னையும் பொதியாகக் கட்டிக்கொண்டும் சிறப்போடு இயலுகின்ற வண்டிகளோடும் உதயண நம்பியின் அரண்மனையகத்தே நிரப்பும் பொருட்டுப் படைஞர் செல்கவென எழுச்சி முறையையும் விதித்து என்க.
|
|
(விளக்கம்) இரு பிறப்பாளர் - அந்தணர். பதுவாய் என்பது படையுறுப்பினுள் ஒன்றுபோலும். பதுவாய்க் காப்புறு படைத்தொழில் இளைஞர் எனப் பின்னும் (3-24 : 150) கூறுவர்.
தொறு - நிரை. ஆனிரையும் யாட்டு நிரையும் என்க. கோடியலூர்தி - யானை மருப்பாற் செய்த சிவிகை முதலியன. விசியுறுத்து - கட்டி. அகம் - உதயணன் அரண்மனையகம். பாடு - பெருமை. பண்டி - வண்டி. படைசெல்லுதலை விதித்து என்க.
|