உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
             நாள்கொளற் கிருந்துழி நன்னகர் கேட்பக்
            கழிந்த யாண்டுங் கயநீ ராட்டணி
            ஒழிந்ததன் றண்ட முயர்கொடி மூதூர்க்
     230    குருதி வெள்ளங் கூலம் பரப்பி
            அழுகுரன் மயங்கிய வல்லற் றாக
            மதவலி வேழ மைய லுறுத்த
            கடவுள் யானெனக் கடவுட் காட்டிப்
            பேரிசைக் கடவுட் பெருநகர்த் தோன்றிச்
 
                 (பாகீரதி என்பவளின் செயல்)
                  227 - 234: நன்னகர்.........தோன்றி
 
(பொழிப்புரை) தெய்வமேறி ஆடுஞ் செயலிற் பெருமையுடைய பாகீரதி என்னும் ஒரு தேவராட்டி (240) பெரிய புகழையுடைய தொரு பெரிய கோயிலினின்றும் பலருங் காண ஞெரேலென வெளிப்பட்டு ''மக்காள்! கேண்மின்! சென்ற யாண்டும் திருநீர்ப் பொய்கைக்கண் நிகழ்த்தும் நீர்விழாச் செய்யப்படாது ஒழிந்தது அன்றோ! அதனாற் சினங்கொண்டு அதற்குத் தண்டனையாக உயர்ந்த கொடிகளையுடைய இந்த மூதூரின் கடைவீதி எங்கும் குருதிவெள்ளம் பரவும்படி செய்து யாண்டும் அழுகுரல் கலந்த துன்பத்தை உடைத்தாக மதத்தையும் வலிமையுமுடைய நளகிரி யென்னும் களிற்றுயானையை வெறியூட்டி விடுத்த கடவுள் காண் யான்!'' என்று தன்மேல் தெய்வமேறியிருத்தலை மக்கட்குக் காட்டா நிற்ப என்க.
 
(விளக்கம்) அமைச்சர் முடிவினை ஆங்கிருந்த வயந்தகன் யூகியின்பாற்சென்று கூற அந்த யூகியின் ஏவுதலானே, பாகீரதி என்னும் பழைய தேவராட்டி இவ்வாறு நடிக்கின்றனள் என்றுணர்க. கயம் - திருநீர்ப்பொய்கை. கூலம் - கடைவீதி. வேழம் - நளகிரி. கடவுட் பெருநகர்த்தோன்றி - ஒரு தெய்வத்தின் பெரிய கோயிலினின்றும் வெளிப்பட்டென்க. மாந்தர் நம்புதற் பொருட்டு அங்ஙனம் செய்தல் வேண்டிற்று. கடவுள் என்றது உஞ்சை நகரத்து அதிதெய்வம் என்றவாறு. காட்டி - காட்டா எனத் திரித்துக் கொள்க.