உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
         
     235    சேரி யாயத்துச் செம்முதிர் பெண்டிரொடு
            கட்டறி மகடூஉக் கடிமுறத் திட்ட
            வட்ட நெல்லு மாண்பில பெரிதெனக்
            குற்ற முண்டெனிற் கூறுமி னெமக்கெனக்
 
                     (இதுவுமது)
              235 - 238: சேரி.........எமக்கென
 
(பொழிப்புரை) அவ்வமயத்து அத்தெருவின்கண் கூடிய கூட்டத்தோடு நின்ற செவ்விய முதுமையுடைய பெண்டிர் முன்னிலையில் (யூகி ஏவலால் வந்த கள்ளவேடம் புனைந்த வளாகிய) ஒரு கட்டுவிச்சி, தான் தெய்வத் தன்மையுள்ள தனது முறத்திலிட்டுக் குறிபார்த்த வட்ட வடிவிற்றாய்ப் பரப்பிய நெல்லினாற் கண்ட குறியும் பெரிதும் தீமையையே குறிப்பதாகின்றது என்று கூறினளாக; அது கேட்ட அம் முதுபெண்டிர் ஆண்டுத் தெய்வங் காட்டிநின்ற பாகீரதியை நோக்கிப் "பெரியீர்! அங்ஙனம் தீமை வருதற்கு யாங்கள் இழைத்த குற்றம் உண்டாயின் அதனை எமக்குக் கூறுமின் !" என்று வேண்டா நிற்றலானே என்க.
 
(விளக்கம்) பாகீரதியை ஏவிய யூகியே வேறு ஒருத்தியைக் கட்டுவிச்சியாக வேடம் புனைந்துகொண்டு மாந்தர் முன்னிலையில் இங்ஙனம் குறி கூறும்படி செய்தனன் என்றுணர்தல் வேண்டும்.

   கட்டறிமகடூஉ - கட்டுவிச்சி. கட்டுப்பார்த்தலை அறிந்தவள் கட்டாவது - சிறுமுறத்தில் வட்டமாகப் பரப்பிய நெல்லிற் பார்க்கும் ஒருவகைக் குறி. மாண்பில என்றது தீமையையே குறிக்கின்றன என்றவாறு. அதுகேட்ட அம்முது பெண்டிர் அவ்வமயம் ஆங்குத் தெய்வங்காட்டி வந்த பாகீரதியை நோக்கி அதற்கு யாங்கள் செய்த குற்றமுண்டோ? உண்டெனிற் கூறுமின் என்று வேண்ட என்று விரித்தோதிக் கொள்க.