உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
             பன்றியெறி யுற்ற புண்கூர் ஞமலி
            குன்றா வடிசிற் குழிசி காணினும்
            வெரீஇ யன்ன வியப்பின ராகி
     255    அலகை மூதூ ரான்றவ ரெல்லாம்
            உலகந் திரியா வொழுக்கின ராதலிற்
            காவன் மன்னற்குக் கதுமென வுரைத்தலிற்
 
             (சான்றோர் அரசனுக்கு அறிவித்தல்)
              252 - 257: பன்றி...........உரைத்தலின்
 
(பொழிப்புரை) இச்செய்தி அறிந்த பிற நகர்க்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாகிய பழைய அந்த உஞ்சை நகரத்தே வாழும் சான்றோரெல்லாம், பன்றியினால் தாக்குண்டு புண்மிக்கு உயிர் தப்பிய நாய் பின்னர் இல்லத்தே சோறு சமைக்கும் பெரிய கரிப் பானையைக் கண்டுழியும் அப்பன்றியென்றே கருதித் துண்ணென அஞ்சி நடுங்குதல் போன்று பண்டு நளகிரியாலே தாம் பட்ட துன்பத்தாலே துண்ணென அஞ்சி மருள்வாராகித் தம் முன்னோராகிய சான்றோர் ஒழுகிய ஒழுக்கமுறையில் பிறழாமே ஒழுகும் மேற்கோளுடைய ராகலின், இந்நிகழ்ச்சியை மன்னுயிர் காக்கும் தம் மன்னனாகிய பிரச்சோதனன்பால் விரைந்துசென்று கூறுதலானே என்க.
 
(விளக்கம்) பன்றியால் எறியப்பட்டு அதனால் பெரிதும் புண்ணுற்ற ஞமலி என்க. ஞமலி - நாய். குன்றாக்குழிசி என்றது பெரிய பானை என்பதுபட நின்றது, அடிசிற் குழிசி - சோற்றுப் பானை, அது கரிய உருவமுடைமையால் பன்றிபோற் றோன்றுதலின் ஞமலி வெருவிற்று என்க. அலகை எடுத்துக்காட்டு. ஆன்றவர் - கல்வி கேள்விகளானும் நற்பண்புகளானும் ஒழுக்கத்தானும் நிரம்பிய பெரியோர். உலகம் - சான்றோர். கதுமென : விரைவுக் குறிப்பு.