உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
             றேவர் சொல்லும் தேததை யாகென
            வெண்முகை யடுத்துப் பைந்தோடு படுத்து
     260    மாத ரங்கையின் மங்கலத் தியற்றிய
            வாகைக் கண்ணி வலத்திற் சூட்டித்
            தானைச் சேரித் தலைப்பெருந் திருவன்
            நாணீ ராட்டணி நாளையென் றறைதலும்
 
              (சேனாபதி செயல்)
         258 - 263: தேவர்............அறைதலும்
 
(பொழிப்புரை) அது கேட்ட மன்னன் 'ஆயின் அத்தெய்வம் யாது சொல்லிற்றோ அஃது இன்னே நிகழ்வதாக!' என்று கட்டளை யிடுதலானே படைஞர் சேரிக்குத் தலைவனாகிய பெருஞ் செல்வமுடைய சேனாபதி, வாகையினது வெள்ளிய அரும்புகளைப் பசிய தழையோடு விரவி மங்கலந்தோன்ற மகளிர் அழகிய கையாற் புனைந்தளித்த மாலையினைத் தன் வலப்பக்கத்தே அணிந்து கொண்டு நாளைத், திருநீராட்டு விழா நிகழும் என்று அந்த நகர மாந்தர்க் கெல்லாம் அறிவித்தலாலே என்க.
 
(விளக்கம்) திருவிழாவை அறிவிப்போர் படைத்தலைவர் என்பதும் அவர் அறிவிக்குங்கால் வாகை மாலையை வலத்தோளிலே அணிந்துகொண்டு அறிவிப்பர் என்பதும் இதனாற் பெற்றாம். தேவர் - தெய்வம். அதை என்புழி ஐகாரம் சாரியை. மங்கலத்தை உணர்த்தும்பொருட்டு மங்கலமுடைய மகளிர் தமது அங்கையாற் புனைந்த வாகைக்கண்ணி என்க. தானைச் சேரித் தலைவனாகிய பெருந்திருவினையுடைய சேனாபதி என்க.