உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
38. விழா வாத்திரை |
|
மாலை
யணிந்த மணிக்காழ்ப்
படாகையொடு
கால்புடைத் தெடுத்த கதலிகை
நெடுங்கொடி ஆர்வ
மகளிரு மாய்கழன் மைந்தரும் 10
வீர குமரரும் விரும்புவன
ரேறிய மாவுங் களிறு
மருப்பிய லூர்தியும்
காலிரும் பிடியுங் கடுங்காற்
பிடிகையும் தேரு
மாக்களுந் தெருவகத்
தெடுத்த எழுதுகள்
சூழ்ந்து மழுகுபு மாழ்கிப் 15
பகலோன் கெடுமெனப் பாற்றுவன
போல அகலிரு வானத்
துகடுடைத் தாட
|
|
(இதுவுமது) 7
- 16 : மாலை..........ஆட
|
|
(பொழிப்புரை) ஆர்வமிக்க
இளமகளிரும் அழகிய மறக்கழல் கட்டிய மைந்தரும்
இளமறவரும் விரும்பி ஏறிய குதிரையும் களிற்றியானைகளும்,
யானை மருப்பாலியற்றப்பட்ட சிவிகை முதலியனவும், காற்றெனச்
செல்லும் கரிய பிடியானைகளும், கடிய கால்களையுடைய
பிடிகையும், தேரும் காலானடக்கும் மாக்களும் தெருவின்கண்
இயங்குதலானே எழுப்பப்பட்ட துகள், படிந்து ஞாயிற்று மண்டிலம் மழுங்குதலாலே
மலர்மாலையணியப்பட்ட மணிகள் பதித்த காம்புகளையுடைய பெருங்கொடிகளும்
காற்றாற்றாக்குண்டு எழாநின்ற கதலிகை என்னும் நீண்ட கொடிகளும்
அஞ்ஞாயிற்று மண்டிலம் கெட்டொழியுமே என்று
இரங்கி அத்துகள்களை இடையிலே தடுத்துத் துடைப்பன போன்று பெரிய
வானத்தே உயர்ந்து நின்று ஆடா நிற்பவும் என்க.
|
|
(விளக்கம்) படாகை -
பெருங்கொடி. கதலிகைக் கொடி - ஒரு வகைக் கொடி. படாகையும் கதலிகைக்
கொடியும் மகளிர் முதலியோர் எடுத்த துகள் படிந்து பகலோன் மழுகி மாழ்கும்
என்று அவற்றை இடையிலேயே தடுத்துத் துடைப்பனபோல வானத்தே ஆட
என்க. இது தற்குறிப்பேற்றம். ஆய் - அழகு. எழுதுகள்:வினைத்தொகை.
பாற்றுதல் - நீக்குதல்.
|