உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            விசும்புற நிமிர்ந்த பசும்பொன் மாடத்து
           வெண்சுடர் வீதி விலக்குவனர் போல
           எண்ணரும் பல்படை யியக்கிடம் பெறாஅ
     20    நகர நம்பிய ரரச குமரர்
           நிறைகளி றிவைகா ணீங்குமி னெனவும்
 
                (இதுவுமது)
          17 - 21 :  விசும்புற.........எனவும்
 
(பொழிப்புரை) இனி நகர நம்பியரும் அரச குமரரும் தெருக்களின் இருமருங்கும் வானுற உயர்ந்து நிற்கும் தத்தம் பசிய பொன்மாளிகையிலேறி நின்று தெருவிலே குழுமிய சிறுவர்களை நோக்கி அரசனுடைய எண்ணுதற்கரிய பலவாகிய படைகள் இயங்குதற்கு வழி பெறாவாயின; உதோ ஊர்ந்து வருகின்ற நிறைந்த யானைகள் காணுங்கோள் என்றும், இவற்றிற்கு வழி விடுங்கோள் என்றும், அகலுமின்! என்றும் திங்கள் மண்டிலம் செல்லும் வழியை விலக்குவார் போன்று கூவா நிற்ப என்க.
 
(விளக்கம்) நகர நம்பியரும் அரச குமரரும் ஏறி நின்று இடம் பெறாஅ, இவை களிறு காண் நீங்குமின் எனவும் என்று இயைத்துக் கொள்க.