உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            பெருநீர்க் கருங்கட றுளுப்பிட் டதுபோல்
     30    ஒண்ணுதன் மகளி ருண்க ணிரைத்த
           கஞ்சிகை துளங்கக் கயிற்றுவரை நில்லாச்
           செஞ்சுவற் பாண்டியஞ் செல்கதி பெறாஅ
           குரைத்தெழுந் துகளுங் குரம்புவி நிரைத்துடன்
           சங்கிசை வெரீஇச் சால்பில பொங்கலின்
 
                 (இதுவுமது)
        29 - 34 :  பெருநீர்..........பொங்கலின்
 
(பொழிப்புரை) ஒள்ளிய நுதலையுடைய மகளிருடைய மையுண்ட கண்கள் அகத்தே நிரல்பட்டிருந்த உருவுதிரைச் சீலைகள் மிக்க நீரையுடைய கரிய கடல் துளும்பினாற் போன்று அசையா நிற்பவும், மூக்கணை கயிற்றின் அடங்கி நில்லாத செவ்விய எருத்தையுடைய வண்டியிழுக்கும் எருதுகள் தாம் இயங்குதற்கு இடம் பெறாமையாலே முழங்கித் தம் குளம்பாலே நிலத்தை வரன்றுதலாலே எழுகின்ற துகளால் நிலத்தை நிரைத்து அயலிலே முழங்காநின்ற சங்கு முழக்கத்திற்கு வெருண்டு அமைதியிலவாய்த் துள்ளுதலானே என்க.
 
(விளக்கம்) உருவுதிரையகத்தே இருக்கும் மகளிர் அத்திரையினூடே புறத்தே பார்த்தலின் அவர் கண்கள் நிரல்பட்டுத் தோன்றின ஆதலின் மகளிர் உண்கண் நிரைத்த கஞ்சிகை என்றார். கஞ்சிகை - உருவு, திரைச்சீலை. கஞ்சிகை - கடல் துளுப்பிட்டது போலத் துளங்க என்க. சுவல் -எருத்து. கயிறு - மூக்கணைகயிறு. பாண்டியம் - வண்டி. பாண்டியம் பெறாஅ குறைத்து குரம் எழும் துகளால் புவிநிரைத்து என மாறிக்கூட்டி குரத்தால் வரன்றுதலாலே எழுகின்ற துகளாலே என்க. துகளும் என்புழி உம்மை இசைநிறை என்க. சால்பு - அமைதி. பொங்கலின் - துள்ளுதலால்.