உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
         
     35    அவிழ்ந்த கூந்த லங்கையி னடைச்சி
           அரிந்துகால் பரிந்த கோதைய ராகத்துப்
           பரிந்துகா ழுகுத்த முத்தினர் பாகர்க்குக்
           காப்பு நேரிய கூப்பிய கையினர்
           இடுக்க ணிரப்போர் நடுக்க நோக்கி
     40    அரறுவ போல வார்க்குந் தாரோ
           டுரறுபு தெளித்துக் கழறும் பாகர்
           வைய நிரையும் வயப்பிடி யொழுக்கும்
 
                  (இதுவுமது)
          35 - 42 :  அவிழ்ந்த..........நிரையும்
 
(பொழிப்புரை) அஞ்சி நடுங்கிய மகளிர் அவிழ்ந்து சரியும் தம் கூந்தலை அழகிய தமது கையில் ஏந்திக்கொண்டு அறுந்த மலர்க் காம்புகள் இற்ற மாலையினையுடையராய் ஆரம் அறுந்து முத்துக்களை உகுக்கும் மார்பினையுடையராய்த் தம்மைப் பாதுகாத்தற்கு உடன்படும் பொருட்டு அவ்வண்டிப்பாகரை நோக்கிக் கைகூப்பித் தொழுவாராக; இங்ஙனம் இடுக்கணுற்று இரக்கும் அம்மாதருடைய நடுக்கத்தைக் கண்டிரங்கி அலறுவது போன்று ஆரவாரிக்கும் அவ்வெருதுகளின் கிண்கிணி மாலை யாரவாரத்தோடே தாமும் வாயால் உரப்பி அக்காளைகளை அமைதி செய்து, அவற்றைக் கடுஞ் சொல்லால் அச்சுறுத்தா நின்ற பாகரையுடைய வண்டி நிரலும் என்க.
 
(விளக்கம்) அரிந்து - அறுபட்டு. காழ் - ஆரம். காழ்பரிந்து முத்துகுத்த மார்பினர் என்க. காப்பு நேரிய - காத்தற்கு உடன்படுதற்கு. அரறுவ - அலறுவ. தார் - கிண்கிணி மாலை, எருதுகள் பூண்டவை. தெளித்து - அமைதி செய்து. கழறுதல் - கடுஞ்சொற் கூறி அச்சுறுத்தல்.