உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            கூல வாழ்நர் கோன்முறை குத்திய
           நீலக் கண்ட நிரைத்த மருங்கின்
     60    உண்ண மதுவு முரைக்கு நானமும்
           சுண்ணமுஞ் சாந்துஞ் சுரும்பிமிர் கோதையும்
           அணியுங் கலனு மாடையு நிறைந்த
           கண்ணகன் கடைக ளொண்ணுத லாயத்துக்
           கன்னி மாண்டுழித் துன்னுபு நசைஇய
     65    தூதுவர் போல மூசின குழீஇ
           ஆணைத் தடைஇய நூனெறி யவையத்துக்
           கல்வி யாளார் சொல்லிசை போல
           வேட்போ ரின்றி வெறிய வாக
 
                (இதுவுமது)
         58 - 68 :  கோல்...........வெறியவாக
 
(பொழிப்புரை) ஊன்று கோல்களை முறைப்பட நட்ட நீல நிறமுடைய கண்டத்திரையை நிரல்படக் கட்டி வளைத்த இடங்களிலே, நீராடுவோர் பருகுதற்குரிய கள் வகைகளும், பூசிக்கொள்கின்ற நறுமணச் சுண்ண வகைகளும், சாந்த வகைகளும், வண்டு முரலும் மலர்மாலை வகைகளும், அணிகல வகைகளும், நீராடற்குரிய ஆடை வகைகளும், நிறைந்த அங்காடிகள், ஒள்ளிய நுதலையுடைய தோழியரையுடைய அரச கன்னிகை ஒருத்தி மணப் பருவத்தாலே மாட்சிமையுற்ற செவ்வியிலே பிறநாட்டு மன்னர்கள் அவளை மணஞ்செய விரும்பி விடுத்த தூதர் வந்து குழுமுதல்போன்று குழுமிக் கிடந்தும், இறைவன் கட்டளையாலே வாய் வாளாவிருக்கும்படி தடைசெய்யப்பட்ட நூல்வழியையே மேற்கொண்ட சான்றோர் நல்லவையின்கண் கல்லாத மாக்களின் பேச்சொலியை விரும்புவோர் யாரும் இலராதல் போன்று, இவ்விலைப் பொருளை விரும்பிக் கொள்ளுவோர் ஆங்கு யாருமில்லாமையாலே பயன்படாதனவாகிக்கிடப்ப என்க.
 
(விளக்கம்) பொருள்கள் வந்து குழுமிக் கிடத்தற்கு கன்னி மாண்டுழித் தூதுவர் வந்து குழுமிக் கிடத்தல் உவமை. இனி அவை விரும்பப் படாமைக்கு அவையத்துக் கல்லான் சொல் விரும்பப் படாமை உவமை. நூனெறி தழுவிய சான்றோர் அவையின்கண் கல்லா மாக்கள் சொல்லிசையை யாரும் விரும்பாமை போன்று ஆங்குக் குழுமிய கூட்டத்தில் ஒவ்வொருவரும் தத்தமக்கு வேண்டிய நீராட்டுப் பண்டங்களைக் கொடு வந்துள்ளமையால் இவ்விலைப் பொருள் வேட்போரின்றிக் கிடந்தன என்றவாறு.
    ஆயத்துக்கன்னி என்றமையானும் தூதுவர் வரவு கூறினமையானும்
அரசகன்னி என்பது பெற்றாம். மூசின - மொய்த்தன. துன்னுபு
மணஞ்செய்து கொண்டு எய்த. நசைஇயினமையால் விடுத்த தூதுவர்
என்றவாறு. கல்வியாளார் - கல்லாதார். வெறிய - பயனில்லாதன.