உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            மாக்க ளுழிதரு மணனெடுந் தெருவின்
     70    மடலிவர் போந்தை மதர்வைவெண் டோட்டினும்
           படலைவெண் சாந்தினும் படத்தினு மியன்ற
           பந்தரும் படப்பும் பரந்த பாடி
           அந்தமு மாதியு மறிவருங் குரைத்த
           யோசனை யகலத் தொலிக்கும் புள்ளிற்
     75    றேவரும் விழையுந் திருநீர்ப் பொய்கைக்
           கரையுங் கழியுங் கானலுந் துறையும்
 
                 (தங்குமிடங்கள்)
          69 - 76 :  மாக்கள்.........துறையும்
 
(பொழிப்புரை) மாந்தர் சுற்றித் திரிகின்ற மணலையுடைய வீதிகளிலே மடலோடு வளர்கின்ற பனையினது மதர்ப்புடைய வெள்ளிய குருத்துகளாலும் தழைகளோடு கூடிய வெண் சந்தனமரக் கொம்புகளானும் படாஅங்களானும் இயற்றப்பட்ட பந்தர்களினும், தோட்டங்களினும், பரவிய பாடி வீடுளிகனும், தொடக்கமும் இறுதியும் அறிதற்கொண்ணாததாய் ஒரு யோசனை அகலத்தையும் ஆரவாரிக்கின்ற பல்வேறு பறவையினங்களையும் உடையதாய்த் தேவர்தாமும் விரும்புதற்குக் காரணமான பேரழகுடைய அத்திரு நீர்ப் பொய்கைக் கரைகளினும் கழிக்கரைகளினும் சோலைகளினும் நீராடுந்துறைகளினும் என்க.
 
(விளக்கம்) உழிதரும் - சுற்றித் திரிகின்ற. மடலோடு வளர்கின்ற போந்தை என்க போந்தை - பனை. படலை - தழை. தழையோடு கூடிய வெண்சந்தன மரக்கொம்புகளானும் என்க. படம் - படாஅம். படப்பு - தோட்டம். பாடி - ஆங்கமைக்கப்பட்ட வீடுகள். அப்பொய்கை எங்குத் தொடங்குகின்றது எங்குப் போய் முடிகின்றது என்று யாரானும் ஆதியும் அந்தமும் அறியவியலாத என்றவாறு. கழி - அப்பொய்கையினின்றும் பிரிந்து செல்லும் கிளைகள் என்க. கானல் - சோலை. துறை - நீராடுந் துறை.