உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            உவாக்கட லொலியி னுரிமையொ டுராஅய்
     90    விழாக்கொள் கம்பலின் வெகுண்டுவெளின் முருக்கி
           எழாநிலை புகாஅ வினங்கடி சீற்றத்
           தாணை யிகக்கு மடக்கருங் களிறு
           சேணிகந் துறைந்த சேனையிற் கடிகென
 
              (பிரச்சோதனன் செயல்)
             89 - 93 :  உவா............என
 
(பொழிப்புரை) அச்செய்தி கேட்ட பிரச்சோதன மன்னன் யாம் கோப்பெருந்தேவியோடு சென்று மேற்கொள்ளாநின்ற இத் திருவிழாவின்கண் உவா நாளில் பொங்கியெழுகின்ற கடல் ஒலி போன்று ஆரவாரம் உண்டாகுமன்றோ, அவ்வாரவாரங் கேட்டுச் சினந்து கட்டுத்தறியை முறித்துத் தங்கூடத்தே புகாதனவாய்த் தமது கூட்டத்தையே கடிகின்ற சீற்றத்தோடு பாகருடைய கட்டளையையும் கடக்கின்ற அடக்குதற்கும் அரியவாயுள்ள களிற்றியானைகளை இப்படையினின்றும் நமது தொலைவிலுறைகின்ற படைகட்குச் செல்லும்படி அகற்றுமின் என்று கூறியும் என்க.
 
(விளக்கம்) கடலொலி போன்ற கம்பலின் என்க. கம்பல் - கம்பலை, ஆரவாரம். வெளில் - கட்டுத்தறி. எழாநிலை - யானைக் கூடம். இனம் - தம்மினமாகிய யானைகள், மாந்தர் குழுவுமாம். பாகருடைய ஆணையென்க. இகக்கும் - கடக்கும். அக்களிறுகள் சண்டிருப்பின் மாந்தர்க்கு இடையூறு செய்யும் ஆதலால் அகற்றுக என்றவாறு. சேண் இகந்து உறைந்த சேனை - நாட்டின் எல்லைகளிலே உறைகின்ற படைகள் என்க. சேனையிற் சேருமாறு கடிக என்றவாறு.