| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 38. விழா வாத்திரை | 
|  | 
| வேந்துபிழைத் 
      தகன்ற வினைவ ராயினும் 95    
      சேர்ந்தோர்த் தப்பிய செறுந 
      ராயினும்
 கலங்கவர்ந் தகன்ற கள்வ 
      ராயினும்
 நிலம்பெயர்ந் துறைத னெடுந்தகை 
      வேண்டான்
 தொகுதந் தீண்டிக் கிளைஞ 
      ராகிப்
 புகுதந் தீகவிப் புனலாட் 
      டகத்தெனச்
 100    சாற்றிடக் 
      கொண்ட வேற்றுரி 
      முரசம்
 திருநகர் மூதூர்த் தெருவுதோ 
      றெருக்கி
 மெய்காப் பிளைய ரல்லது 
      கைகூர்ந்
 திடைகொள வரினு மிருபத் 
      தொருநாட்
 படைகொளப் பெறாஅப் படிவத் தானையன்
 | 
|  | 
| (இதுவுமது) 94 - 104 
      :  வேந்து............தானையன்
 | 
|  | 
| (பொழிப்புரை)  நமது அரசியலுக்குத் 
      தவறிழைத்து ஊரை   விட்டு ஓடிப்போன தீவினையை உடையோராயினும், தம்மைச் 
        சேர்ந்தவர்கட்குப் பிழைசெய்து தண்டிக்கப்பட வேண்டியவராயினும், 
        அணிகலன்களைக்  களவுகொண்ட  கள்வராயினும் இத்திரு  
      விழா   நாளிலே ஊரைவிட்டுத் தூரத்தே சென்று மறைந்துறைதலை அரசன் 
        வேண்டுகிலன், இத்தகையோரெல்லாம் யாண்டிருப்பினும் ஈண்டு வந்து 
        குழுமி  உறவினராகி  நீர்விழாவிலும்  அஞ்சாமல்  
      வந்து  கலந்து   கொள்வாராக என்று கூறியும், அறிவித்தற் பொருட்டு 
      ஆனேற்றின் தோல்   போர்த்த  முரசத்தை  அழகிய அவ்வுஞ்சை 
      நகரத்துத் தெருத் தோறும்   அறைவித்த பின்னர், திரு நீராட்டுத் திருவிழா 
      நிகழுகின்ற இருபத்தொரு   நாளும் அரச கு டும்பத்தைப் 
      பாதுகாக்கும்   தொழிலை மேற்கொண்ட   
      மெய்க்காப்பிளையர்  அல்லது,  தமக்குள்  யாரும்  இடையிலே 
        செவ்விநேரினும் கொல்படைக் கலங்களைத் தீண்டாத தொரு விரதத்தை 
        மேற் கொண்ட படைமறவரையுடைய அப்பிரச்சோதன மன்னன் என்க. | 
|  | 
| (விளக்கம்)  வேந்து - அரசியல். அரசியலுக்குத் தவறிழைத்து   அஞ்சி 
      ஊரைவிட்டோடியவர் என்க. சேர்ந்தோர் - தம்மினத்தார். செறுநர் -   
      செறப்படுவோர் ; ஒறுக்கப்படுவோர். கலம் - அணிகலம். நிலம் - தம்மூர்.   
      வள்ளுவர் கூற்றாகக் கூறுதலின் நெடுந்தகையென்று படர்க்கையாகக் கூறினன்.   
      ஏற்றுரி கொண்ட முரசம் என்க. எருக்கி - எருக்குவித்தென்க. மெய்க்காப்பிளையர் - அரசன் உரிமை முதலியோர் உடலைப் பாதுகாக்கும்   
      மறவர். இடைகொளவரினும் - இடை - செவ்வி நேரினும். இருபத்தொரு நாள்   
      என்றது இத்திருவிழா நிகழும் இருபத்தொரு நாளும் என்றவாறு. முற்றும்மை   
      செய்யுள் விகாரத்தாற்றொக்கது. படிவம் - விரதம். இதனால் அவ்விழா நிகழும் 
        இருபத்தொரு நாளும் மறவர் படைக்கலம் எடுத்தல் இல்லை என்பது 
      பெற்றாம்.
 |