உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
         
     105    தாழ்புனற் றாரையுந் தமரொடு தருக்கும்
           நாழிகைத் தூம்பு நறுமலர்ப் பந்தும்
           சுண்ண வட்டுஞ் சுழிநீர்க் கோடுமென்
           றெண்ணிய பிறவு மிளையோர்க் கியைந்த
           புனலகத் துதவும் போகக் கருவி
     110    பணையெருத் தேற்றிப் பண்ணின வாகி
           மாலையு மணியு மத்தகப் பட்டும்
           கோதையு மணிந்த கோல முடையன
           திருநீ ராட்டினுட் டேவியர்க் காவன
           மேவிய வனப்பொடு மிசைபிறர்ப் பொறாதன
     115    பாக ரூரப் பக்கஞ் செல்வன
           ஆறாட் டிளம்பிடி யாயிரத் தங்கட்
           குறும்பொறை மருங்கிற் குன்றம் போல
           இருநில நனைப்ப விழிதரு கடாத்துக்
           கைம்மிகக் களித்த கவுள தாயினும்
     120    செயிர்கொண் மன்னர் செருவிடத் தல்ல
           துயிர்நடுக் குறாஅ வேழம் பண்ணி
 
                 (பிடிகளின் சிறப்பு)
             105 - 121 :  தாழ்............பண்ணி
 
(பொழிப்புரை) தாழாநின்ற நீரை வீசுதற்குரிய தாரையும், தம் நண்பரோடு எதிர்த்துத் தருக்குதற்குக் காரணமான எந்திரநாழிகையும், நறிய மலர் வடிவமுடைய மட்டத்துருத்தியும், சுண்ண நீர் பொதிந்த வட்டும், வீசும் நீர் சுழன்று பாய்தலைச் செய்யும் கொம்பும் என்னும் இங்ஙனம் கூறப்பட்டனவும் பிறவுமாகிய இளமையுடையோர் ஆடுதற்கியைந்த நீராடற்கண் பயன்படுகின்ற இன்பக் கருவிகள் பலவும் பருத்த பிடரியில் அமைத்து அணிசெய்யப்பட்டனவாகி மேலும் பொன் முதலியவற்றால் இயன்ற மாலைகளையும் ஒலிக்கும் மணிகளையும் மத்தகப் பட்டையும், மலர்மாலைகளையும், அணிந்த அழகுடையனவும், திருநீர் விளையாட்டின்கண் கோப்பெருந்தேவி முதலிய உரிமை மகளிர்க்கு வேண்டுவனவும், இயற்கை யழகுடையனவாதலோடு தேவியரல்லாத பிறர் தம்மேல் ஏறப் பொறாஅத மானமுடையனவும், பாகர்கள் பக்கத்தே நின்று செலுத்தச் செல்லுவனவும் ஆகிய ஆறாண்டு அகவையுடைய இளம் பிடியானைகள் ஓராயிரம் நிற்கும் அவ்விடத்தே சிறிய பல குன்றுகளி னயலே நிற்குமொரு பெரிய மலையைப் போன்று தோன்றா நிற்பதும், பெரிய நிலம் நனையும்படி ஒழுகா நின்ற மதநீரையுடைய கவுளை யுடையதாய் மிகவும் வெறி கொள்ளுமிடத்தும் பகைமை கொண்ட மன்னர்கள் எதிர்ந்து செய்யும் போரின்கண்ணல்லாது எவ்வுயிரையும் துன்புறுத்தலில்லாத நல்லொழுக்கமுடையதுமாகிய ஒரு களிற்றியானையை ஒப்பனை செய்வித்தெனன்க.
 
(விளக்கம்) தாழ்புனல் என்புழி தாழ் என்பது இயற்கையடை மாத்திரையாய் நின்றது. தாரை, நாழிகைத் தூம்பு, மலர்ப்பந்து, வட்டு, கோடு என்பன நீர்விளையாடற் கருவிகள். நாழிகைத் தூம்பு எந்திர நாழிகை என்றும் கூறப்படும். மலர்ப்பந்து - மலர்ப்பந்து வடிவினையுடையதொரு கருவி. இதனை மட்டத் துருத்தி என்பர். சுண்ண நீர் பொதிந்த வட்டென்க. பிற நெட்டி முதலியவற்றாற் செய்த வேல் வாள் சக்கரம் முதலியன. போகக் கருவி - இன்பந் தருங் கருவி. தேவியரையன்றிப் பிறர் தம் மேலேறப் பொறாதன என்க. இஃது அவற்றின் மானப்பண்பு கூறியபடியாம். குறும்பொறை - சிறிய மலைகள். குன்றம் - என்றது பெரிய மலையை. குறும்பொறை - பிடிகட்கும் குன்றம் களிற்றுக்கும் உவமை. குன்றம் போலத் தோன்றுவதும் என்க. கடாத்துக் கவுளது என்றும் கைம்மிகக் களித்ததாயினும் என்றும் மாறுக. செயிர் - பகைமை. வேழம் - ஈண்டுக் களிறு என்பதுபட நின்றது. பண்ணி - பண்ணுவித் தென்க.