உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            கடைப்பகச் செப்பே கவரி குஞ்சம்
           அடைப்பைச் சுற்றமொ டன்னவை பிறவும்
           அணிகலப் பேழையு மாடை வட்டியும்
           மணிசெய் வள்ளமு மதுமகிழ் குடமும்
     165    பூப்பெய் செப்பும் புகையகி லறையும்
           சீப்பிடு சிக்கமுஞ் செம்பொற் கலசமும்
           காப்பியக் கோசமுங் கட்டிலும் பள்ளியும்
           சுட்டிக் கலனுஞ் சுண்ணகக் குற்றியும்
           வட்டிகைப் பலகையும் வருமுலைக் கக்சும்
     170    முட்டிணை வட்டு முகக்கண் ணாடியும்
           நக்கிரப் பலகையு நறுஞ்சாந் தம்மியும்
           கழுத்திடு கழங்குங் கவறுங் கண்ணியும்
 
        (விழாவிற்குக் கொண்டு செல்லும் பண்டங்கள்)
            161 - 172 :  கடைப்பக..........கண்ணியும
 
(பொழிப்புரை) அகத்தே கடைந்த செப்புகளும், சாமரையும், குஞ்சமும், அடைப்பை இனங்களும், இன்னோரன்ன பிறபொருள்களும் அணிகலப் பேழையும், ஆடை வட்டியும், மணிகள் பதித்த வள்ளங்களும், கள் அருந்துதற்குக் காரணமான குடங்களும், மலர் பெய்து வைக்கும் செப்பும், புகைத்தற்குரிய அகிற்கட்டைகளும், சீப்பு வைக்கின்ற உறியும், செவ்விய பொன்னாலியன்ற கலசங்களும், காப்பியங்கள் வரைந்த சுவடிகளும், கட்டில்களும், பாயல்களும், சுட்டியாகிய கலங்களும், சுண்ணமிட்டு வைக்கும் குற்றிகளும், வட்டிகைப் பலகையும், வளர்கின்ற முலைக்குரிய கச்சுகளும், இரட்டை வட்டுகளும், முகம்பார்க்குங் கண்ணாடியும், முதலையுருவமுடைய மனைப்பலகைகளும், நறிய சாத்தம்மிகளும், கழுத்திலணிகின்ற கழற்காய் மாலைகளும், சூதாடு கருவியாகிய கவறும், கண்ணிகளும் என்க.
 
(விளக்கம்) குஞ்சம்ஈயோட்டுகருவி. அடைப்பை-வெற்றிலைப்பை. சுற்றம் - இனம். அன்னவை - ஐவகை முகவாசமும் பிறவும். வள்ளம் - கிண்ணம். அறை - கட்டை. சிக்கம் - உறி. பள்ளி - பாயல். வட்டிகைப்பலகை - ஓவியப்பலகை. நக்கிரம் - முதலை. கழங்கு - கழற்சிக்காய் வடிவிற் செய்த ஓரணிகலம். கவறு - சூதாடு கருவி.