உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
38. விழா வாத்திரை |
|
பந்தும்
பாவையும் பைங்கிளிக்
கூடும் யாழுங்
குழலு மரிச்சிறு பறையும் 175 தாழ
முழவமுந் தண்ணுமைக்
கருவியும்
ஆயத் துதவு மரும்பெறன்
மரபிற்
போகக் கலப்பையும் பொறுத்தனர்
மயங்கிக்
கூனுங் குறளு மாணிழை
மகளிரும்
திருநுத லாயத்துத் தேவிய ரேறிய
180 பெருங்கோட் டூர்திப் பின்பின்
பிணங்கிச்
செலவுகண் ணுற்ற பொழுதிற் பலருடன்
|
|
(இதுவுமது)
173 - 181 : பந்தும்..........பலருடன்
|
|
(பொழிப்புரை) பந்தும்பாவையும்பசியகிளிக்கூடுகளும்,
யாழும் குழலும் அரித்தெழுமோசையையுடைய சிறு பறையும் தாழமுழவமும் தண்ணுமை
என்னும் கருவியும், இன்னும் மகளிர் குழுவிற் பயன்படா நின்ற பெறலரிய
முறைமையினையுடைய இன்பவிளையாட்டுப் பொருள்களையும் சுமந்தவராக விரவிக்
கூனரும் குறளரும் மாண்புடைய அணிகலன் அணிந்த மகளிர்களும்,
அழகிய நுதலையுடைய மகளிர் குழுக்களையுடைய அரசன் மனைவிமார்கள்
ஏறியிருக்கின்ற யானைமருப்பானியன்ற அந்தச் சிவிகை வண்டிகளின்
பின்னாகப் பின்னாக நெருங்கிவரத் தேவியர் பலரும் ஒருங்கே திருநீர்ப்
பொய்கைக்குச் செல்லத் தொடங்கிய பொழுதென்க.
|
|
(விளக்கம்) பாவை -
விளையாட்டுப் பொம்மை, போகக்கலப்பை - இன்பந்தரும் பொருள்கள். கூன் -
கூனுடையவர். குறள் - குறிய உருவமைந்தவர். இத்தகையோர் உவளகத்தே ஏவல்
செய்வோராயிருத்தல் வழக்கம் மகளிர் என்றது, பணிமகளிரை.
பெருங்கோட்டூர்தி என்றது முன்பு வண்ணிக்கப்பட்ட சிவிகை வண்டிகளை. பலரும்
உடன் செலவு கண்ணுற்ற பொழுதென மாறுக.
|