உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            புதுவது மகிழ்ந்த புகற்சிய ளாகிப்
     215    பதும காரிகை மகண்முக நோக்கித்
           தனித்துஞ் சேனைப் பனித்துறைப் படியின்
           நீரின் வந்த காரிகை நேர்த்தது
           துகடீ ரிருந்தவத் துணிவின் முற்றி
           முகடுய ருலக முன்னிய முனிவரும்
     220    கண்டாற் கண்டவாங் கதிர்ப்பின வாகி
           தண்டாப் பெருந்துயர் தருமிவள் கண்ணென
           உண்மலி வுவகைய ளாகித் தன்மகள்
           இனவளை யாயத் திளையர் கேட்பப்
           புனல்விளை யாட்டினுட் போற்றுமின் சென்றென
     225    ஓம்படைக் கிளவி பாங்குறப் பயிற்றி
           ஆங்கவ ருள்ளு மடைக்கல நினக்கெனக்
           காஞ்சன மாலைக்குக் கைப்படுத் தொழிந்தபின்
 
        (கோப்பெருந்தேவியின் உட்கோளும் செயலும்)
              214 - 227 :  புதுவது.........பின்
 
(பொழிப்புரை) மகளின்வரவு கண்ட பதுமகாரிகை பண்டையினும் சிறப்பப் புதுமையுண்டாகப் பெரிதும் மகிழ்ந்த விருப்பம் உடையளாய் வாசவதத்தையின் திருமுகத்தைக் கூர்ந்து நோக்கித் தன் நெஞ்சினுள்ளே "இவள் உஞ்சை நகரத்துத் திருநீர்ப் பொய்கையின் குளிர்ந்த நீரையுடைய துறையின்கண் தமியளாய்ச் சென்று, நீராடுவாளாயின் இவள் தோற்றம் திருப்பாற் கடலிற் றோன்றிய திருமகளின் தோற்றத்தையே ஒத்திருப்பதாகும். இவள் கண்களைக் குற்றந் தீர்ந்த தவத்தின் தெளிவிலே முதிர்ந்து அண்ட முகட்டின்கண் உயர்ந்துள்ள மேனிலையுலகத்தை எய்திய சித்தர் தாமும் ஒரோவழி கண்டால் மீண்டுங் காண வேண்டும் என்று அவாவுதற்குக் காரணமான ஒளி படைத்தனவாகி அவர்க்கும் ஒழியாத பெரிய துன்பத்தைக் கொடுக்கும் என்று கருதித் தனது நெஞ்சின் மிக்க உவகையுடையளாகித் தன் மகளுடைய தோழியராகிய மகளிர் கூட்டம் கேட்கும்படி அவரைநோக்கி நீயிரெல்லாம் நீர் விளையாட்டின்கண் இவளைப் பிரியாமனின்று பாதுகாக்கக் கடவீர்! இவளுடனேயே செல்லுங்கோள்! என்று அவர்பால் அவளை அடைக்கலமாக்கும் மொழிகளை அழகுறப் பலகாலும் கூறிப் பின்னரும் அத்தோழியர் கூட்டத்துள்ளும் காஞ்சன மாலையைச் சிறப்பாக நோக்கிக் "காஞ்சனமாலாய்! வாசவதத்தை நினக்கே அடைக்கலங்காண்! போற்றிக் கொள்க!" என்று கூறி அவள் கையில் அடைக்கலங் கொடுத்த பின்னர் என்க.
 
(விளக்கம்) கற்சி - விருப்பம். உஞ்சேனை - உஞ்சைநகரம். பனி நீர்த் துறை - திரு நீர்ப் பொய்கையின் குளிர்ந்த நீரையுடைய துறை. நீர் - திருப்பாற் கடல். காரிகை - திருமகள். தோற்றம் நேர்த்தது ஆகும் என்க. துகள் - காம வெகுளி மயக்கங்கள், கண்டால் மீண்டுங் காண்டற்கு அவாம் என்க. தண்டா - தணியாத. அவள் பேரழகினைக் கண்டு உண்மலியுவகை கொண்டாள் என்பது கருத்து.