உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
             ஏற்ற கோலத் தியம்புங் கிண்கிணி
            நூற்றுவர் தோழியர் போற்றியல் கூறத்
     230    தெய்வச் சுற்றத்துத் திருநடந் ததுபோற்
            பையென் சாயலொடு பாணியி னொதுங்கி
            உறைத்தெழு மகளிரொடு தலைக்கடை சார்தலும்
 
               (வாசவதத்தை புறப்படல்)
             228 - 232 :  ஏற்ற...........சார்தலும்
 
(பொழிப்புரை) ஒப்பனை செய்து கொண்ட அழகினையும் ஒலிக்கின்ற கிண்கிணியையுமுடைய நூறு தோழியர் தனக்கு வாழ்த்துப்பாடல் பாடி வாரா நிற்ப வானவர் மகளிர் கூட்டத்திடையே திருமகள் நடந்து வந்தாற் போன்று மெல்லிய சாயலோடு மெல்லென அப்பாடலின் தாளத்திற் கியைய நடந்து, மனவெழுச்சியோடு வருகின்ற அம் மகளிரோடே தலைவாயிலை எய்திய பொழுது என்க.
 
(விளக்கம்) ஏற்ற - செய்து கொண்ட. கோலம் - அழகு. இயம்பும் - ஒலிக்கும். போற்றியல் - வாழ்த்துப்பாடல். பையென் - மெல்லிய. தெய்வச் சுற்றம் - வானவர் மகளிர், திரு - திருமகள். பாணி - தாளம் - அவ்வாழ்த்துப் பாடலின் தாளத்திற்கேற்ப என்க. உறைத் தெழுதல். ஊக்கத்தோ டெழுதல்.