உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
             யவனக் கைவினை யாரியர் புனைந்தது
            தமனியத் தியன்ற தாமரை போலப்
     235    பவழமு மணியும் பல்வினைப் பளிங்கும்
            தவழ்கதிர் முத்துந் தானத் தணிந்தது
            விலைவரம் பறியா வெறுக்கையுண் மிக்க
            தலையள வியன்றது தனக்கிணை யில்லது
            தாயொடு வந்த தலைப்பெரு வையம்
     240    வாயின் முற்றத்து வயங்கிழை யேறப்
            பாத பீடிகை பக்கஞ் சேர்த்தலும்
 
                 (வையத்தின் சிறப்பு)
          233 - 241 :  யவன..........சேர்த்தலும்
 
(பொழிப்புரை) யவன நாட்டுத் தச்சரால் இயற்றப்பட்டு அழகு செய்யப்பட்டதும் பொன்னாற் செய்த தாமரைமலரின் வடிவம் போன்ற வடிவமுடையதும், பவழமும் மாணிக்கமும் பல்வேறு தொழில் வேறுபாடுடைய பளிங்குகளும் ஒளிதவழும் முத்தும் என்னும் இவற்றை அகத்தே பதித்து அணி செய்யப்பட்டதும், பொருள்களின்கண் வைத்துத் தனக்கு விலையாகிய மிக்க பொருளின் எல்லை அறியப்படாத (வண்டியின் அளவுகளுள் வைத்துத்) தலையாய அளவுடையதும்; தனக்கு நிகர்இல்லாததும், (வாசவதத்தையின்) தாயாகிய கோப்பெருந் தேவிக்குச் சீதனமாகப் பண்டு வந்ததும் ஆகிய தலைமையுடைய பெரியதொரு வண்டியின்கண் அத்தலைவாயிலிடத்தே வாசவதத்தை ஏறும் பொருட்டுக் கால்களையுடைய பீடமொன்றனை ஏவன்மகளிர் அதன் பக்கத்தே வைத்துலும் என்க.
 
(விளக்கம்) தமனியம்- பொன். தானம்- இடம். வெறுக்கையுள் வைத்துத் தனக்கு விலை இவ்வளவு என்று எல்லை கூறவியலாத தலையள வியன்றது என்க. தலை இடை கடையென்ற முவ்வகையளவினுள் தலையளவானியன்றது என்க. தாய் : கோப்பெருந்தேவி. பாதபீடிகை - அடியிட்டேறும் பீடம் எனினுமாம். வயங்கிழை: வாசவதத்தை.