உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
             செந்நூல் விசித்த நுண்ணுக நுழைந்த
            இலக்கணப் பாண்டியம் வலத்தி னெற்றிக்
            கண்ணி பரிந்து கடிக்குளம் பிளகலும்
     245    பண்ணிய வையம் பள்ளி புகுகென
            மூதறி பாக னேற லியையான்
            இலக்கண மின்றென விலக்கினன் கடிய
 
                 (இதுவுமது)
          242 - 247 :  செந்நூல்...........கடிய
 
(பொழிப்புரை) அப்பொழுது, அவ்வண்டியின்கண்சிவந்த நூற்கயிற்றாலே கட்டப்பட்ட நுண்ணிய நுகத்தடியின்கீழ் நுழைந்த நல்லிலக்கண மமைந்த எருது வலப்பக்கத்தே காலான் எறிந்து தனது மாலையை அறுத்துக் கொண்டு கடிய தன் குளம்பு வழுக்குறாநிற்ப அதுகண்ட, பழைமையை உணர்ந்த அறிவுடையவனாகிய பாகன் "இவ்வண்டி தனது கொட்டிலிற் புகுவதாக!" என்று கூறி அதனை ஊர்தற்கு அதன்மேல் ஏறுதற்குடன்படானாகி, ''இவ்வண்டி நல்லிலக்கணமுடையதன்று!'' என்று அதனை விலக்கி யகற்றுதலானே என்க.
 
(விளக்கம்) ஒருவருக்கெனக் குறித்துச் செய்யப்பட்ட பொருள் மற்றொருவர்க்குப் பொருந்தாது போலும். இதனால் வாசவதத்தைக்கேற்ற இலக்கணம் இதன்கண் இன்றென மூதறிபாகன் விலக்கினன் போலும். அவன் விலக்கியதற்கு எருது எறிந்து பரிந்து வழுக்கியதனைத் தீயநிமித்தமாகக் கொண்டனன் என்க. கண்ணி பரிந்து - மாலையை அறுத்து. இளகல் - வழுக்குதல். பள்ளி - கொட்டில். மூது - பழைமை.