உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
             பல்வளை யாயத்துப் பைந்தொடி யேறலும்
            செய்யோ ளமர்ந்த செம்பொற் றாமரை
            வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல
            மெல்லியன் மாதரை யுள்ளகம் புகுத்தி
     260    மல்லற் பெருங்கிளை செல்வழிப் படர
 
                   (இதுவுமது)
          256 - 260 :  பல்வளை..........படா
 
(பொழிப்புரை) பலவாகிய வளையலணிந்த தோழியரையுடைய பசிய தொடியணிந்த வாசவதத்தை ஏறியவுடன் வளப்பமுடைய பெரிய சுற்றத்தார் அவ்வாசவதத்தையை, அச்சிவிகை திருமகள் வீற்றிருந்த செவ்விய பொற்றாமரை மலரினது பெரிய இதழான மூடப்பட்ட பொகுட்டைப் போன்று தோன்றும்படி அகத்தே இருத்தித் திருநீர்ப் பொய்கைக்குச் செல்லும் நெறியிலே செல்லா நிற்ப என்க.
 
(விளக்கம்) பைந்தொடி - வாசவதத்தை. செய்யோள் - திருமகள். வள்ளிதழ் - பெரிய இதழ். கொட்டை - பொகுட்டு. மெல்லியன் மாதரை - வாசவதத்தையை. மல்லல் - வளம். பெருங்கிளை - தாயர் முதலிய சுற்றத்தார்.