உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
             முனிவ ராயினு மூத்தோ ராயினும்
            எனையீர் பிறரு மெதிர்வரப் பெறீரென
            வானுறை யுலகினும் வையக வரைப்பினும்
            தான விளைவினுந் தவத்தது பயத்தினும்
     265    எண்ணரும் பல்லுயி ரெய்தும் வெறுக்கையுட்
            பெண்டிருண் மிக்க பெரும்பொரு ளின்மையின்
            உயிரெனப் படுவ துரிமை யாதலிற்
            செயிரிடை யிட்டது செல்வன் காப்பென
            ஆறுகடி முரச மஞ்சுவரக் கொட்டிக்
     270    காவ லாளர் காற்புறஞ் சுற்றப்
 
                (காவலர் முரசறைதல்)
              261 - 270 :  முனிவர்..........சுற்ற
 
(பொழிப்புரை) காவலாளர்"மாந்தர்காள்! வானத்தின்கண்இருக்கின்ற தேவருலகத்தும், இந்நிலவுலகத்தும் வாழும் எண்ணுதற்கரிய பலவாகிய உயிரினங்கள் தாம் தாம் முற்பிறப்பிலே இயற்றிய தானங்களின் பயனாகவும், தவத்தினது பயனாகவும், பெறாநின்ற செல்வங்களுள் வைத்துப் பெண்டிரினும் சிறந்த பெருஞ்செல்வம் ஒன்றேனும் இன்மையால் அ வ்வுயிர்கட்கும் உயிர் என்று பாராட்டப்படுவது அந்த உரிமை மகளிர் ஆகிய செல்வத்தையே ஆதலின். அச்செல்வம் சினத்தை இடையிலே வைத்து மன்னாவனாலேயே நேர்முகமாகச் செய்யப்பட்ட காவலின்கண்ணதாயிற்று: ஆதலின் நீயிர் முனிவரே யாயினும் அகவை முதிர்ந்தோரேயாயினும் வேறு பிறரேயாயினும் வழியெதிர் வாராதே விலகிப் போமின் !" என்று ஆறுகடி முரசத்தைக் கேட்டோர்க்கு அச்சமுண்டாகும்படி முழக்கிக் கொண்டு அம்மகளிர் குழுவின் பக்கத்தே சூழ்ந்து வாரா நிற்ப என்க.
 
(விளக்கம்) முனிவரும் மூத்தோரும் காமத்தை விட்டோர். காமத்தை விட்டோரும் வரப்பெறீர் என்றது ஏனையோர் வரப் பெறாமையை நன்கு வற்புறுத்தபடியாம். ஈண்டு, "பெண்ணிற் பெருந்தக்க யாவுள" என்னும் வள்ளுவர் மொழி நினைவுக்குவரும். தானம் இல்லறத்தின் மேலும் தவம் துறவறத்தின் மேலும் நின்றன. உயிர் என்பது மாந்தர்உயிரை. வெறுக்கை - செல்வம். உயிர்க்கும் உயிர் என்று சிறப்பித்துக் கூறப்படுவது என்க. செயிர் - சினம். அதனை இடையிடுதலாவது, அரசனுடைய சினம் இவ்வுரிமை மகளிரிடையே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது அணுகுவீர் அதற்குப் பலியாகுவிர் என்றவாறு. ஆறுகடி முரசம் - வழிவிலக்கும் பொருட்டு அறைகின்ற முரசம். அஞ்சு - அச்சம். காற்புறம் : ஒருசொல்.