உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
             தனக்கென் றாய்ந்த தலையிரும் பிடிகளுள்
            இலக்கணக் கரும மெட்டா முறையது
            மதியோர் புகழ்ந்த மங்கல யாக்கையொடு
            விதியோர் கொளுத்திய வீரிய முடையது
     295    சேய்ச்செல னோன்பரிச் சீலச் செய்தொழிற்
            பூச்செய் கோலத்துப் பொலிந்த பொற்படை
            மத்தக மாலையொடு மணமகள் போல்வ
            துத்தரா பதத்து மொப்புமை யில்லாப்
            பத்திரா பதியே பண்ணிச் செல்கென
     300    உதயண குமரற் கியைவன பிறவும்
            உழைக்கல மெல்லாந் தலைச்செல விட்டு
 
            (உதயணனுக்கு விடுத்த ஊர்திச்சிறப்பு)
             190 - 301 :  தனக்கென்.............விட்டு
 
(பொழிப்புரை) (மன்னவன்) தன்பொருட்டு ஆராய்ந்து கொண்ட தலையான பெரிய பிடியானைகளுள் வைத்து, இலக்கணச் செயலுக்கு அகப்படாத முறைமையினையுடையதும் அறிஞராற் புகழப்பட்ட நல்லிலக்கண மமைந்த உடம்போடு யானைக்கு விதிவகுத்த சான்றோர் அறிவித்த வீரியப்பண்புடையதும், நெடுந்தொலை செல்லும் வலிய செலவினையும், நல்லொழுக்கினையும், நற்றொழிற்றிறத்தையும், பூத்தொழில் செய்த அழகினையுடைய பொலிவு பெற்ற பொன்னிற மெத்தையினையும், மத்தக மாலையினையும் உடையதும் அழகானே திருமணப் பெண் போன்றதும் வடநாட்டுப் பிறந்த யானைகளினும் தனக்கு நிகர் காணப்படாததும் ஆகிய பத்திராபதி என்னும் நமது பிடி யானையே ஒப்பனை செய்யப்பட்டுச் செல்வதாக என்றும் அவனுக்குப் பொருந்திய பிறபொருள்களையும், உழைக்கலங்களையும், எல்லாம் அவன்பாற்செல்ல விடுத்துப் பின்னர் என்க.
 
(விளக்கம்) தனக்கு - பிரச்சோதனமன்னனுக்கு, விதி - யானைநூல் விதி. வீரியம் - மறப்பண்பு. செலலாகிய - நோன்பரி என்க. படை - மெத்தை உத்தராபதம் - வடநாடு - வடநாட்டின்கண் இமய முதலியவற்றிற் பிறந்த யானைகள் சிறப்புடையன என்பது பற்றி உத்தராபதத்தும் ஒப்புமையில்லாப் பத்திராபதி எனப்பட்டது.