உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            பொலிந்த திருவிற் பொற்புடைத் தாகி
           மலிந்த யாக்கையின் மங்கல மிக்கதன்
     315    வனப்பிற் கொவ்வா வாழ்விற் றாகி
           வாழ்நா ளற்ற வகையிற் றாயினும்
           கணைச்செல வொழிக்குங் கடுமைத் திதுவென
           மனத்திற் கொண்ட மதிய னாகிக்
           கண்டே புகன்ற தண்டா வுவகையன்
     320   தாரணி யிரும்பிடி தலைக்கடை யிரீஇ
           ஏரணி யெருத்த மிறைமக னேறலும்
 
                    (இதுவுமது)
           313 - 321 :  பொலிந்த.........ஏறலும்
 
(பொழிப்புரை) இப்பிடியானை பொலிவு பெற்றதொரு வளமுடைய அழகுடையதாகிக் கொழுவிய தனது உடலின் இலக்கணத்தாலே மங்கல மிக்க தனது பேரழகிற்கு ஒவ்வாத வாழ்வினையுடையதாய் வாழும் நாள் அணுமையில் அற்றுப் போகும் முறைமையினை உடையதாயிற்று. அங்ஙனமாயினும் இவ்வியானை எய்யுமொரு கணையினது வேகத்தினையும் பின்னிடச் செய்யும் கடிய போக்கினை உடையதாகும் என்றும், அதனால் இது நமக்குப் பெரிதும் உதவுவதாகும் என்றும் நெஞ்சத்தே மதித்தவனாய் அதனைக் கண்டதுணையானே அதன்பால் தன் அன்பு செல்லப் பட்டுப் பெரிதும் விரும்பித் தணியாத மகிழ்ச்சியையும் உடையனாய் மாலையணிந்த பெரிய அப்பத்திராபதியை அத்தலை வாயிலிலே கொணர்வித்து நிறுத்தி, அதனுடைய எழுச்சியையுடைய அழகிய பிடரிலே மன்னன் மகனாகிய அவ்வுதயணகுமரன் ஏறியருளலும் என்க.
 
(விளக்கம்) திரு - வளம். பொற்பு - அழகு. மவிந்த - கொழுவிய. மங்கலம் - ஆக்கம். வனப்பு - அழகு; அழகுக்கேற்ற நிறையாயுள் இன்றி, அதற்கு ஒவ்வாத குறையாயுள் உடையது என்றிரங்கியபடியாம். இது கணையினுங் காட்டில் விரைந்து செல்லுவதாகலின் இந்நகரத்தினின்றும் நாம் வெளியேறிச் செல்லுதற்குப் பெரிதும் துணைசெய்வதாகும் என்று மனத்திற்கொண்டு உவகை கொண்டான் என்பது கருத்து. தண்டா - தணியாத. ஏர் - எழுச்சி. இறைமகன் - உதயணன்.