|
உரை | | 1. உஞ்சைக்காண்டம் | | 38. விழா வாத்திரை | | மருங்கிரு
மணிப்புடை நிரந்துடன்
மிளிர
நான்முகங் கவைஇய வான்செய் பச்சைய
330 தானச்செங் கோட்டுத் தோன்மணைப்
படுத்த
சித்திரத் தவிசிற் செறிந்த
குறங்கிற்
பொற்றொடர் பொலிந்த பூந்துகிற்
கச்சைய
கத்திகை சிதர்மணி கட்கத்துத்
தெரிப்ப வித்தக
நம்பியர் பக்கத்து வலித்த 335
கானத்துக் குலைந்த கவரி
யுச்சிய
தானைத் தலைப்படை பாணியிற்
பரிப்ப
அச்செறி புலவ ரளவுகொண்
டமைத்துக்
கட்க நுனித்த கடைக்கட்
டிண்ணுகம்
கொய்சுவ லிரட்டை மெய்யுறக் கொளீஇ
340 ஒட்டிடை விட்ட கட்டின
வாயினும்
ஒன்றிநின் றியங்காச் சென்றிடை
கூடுவ மாயங்
காட்டுநர் மறையப்
புணர்த்த
கோவை நாழிகைக் கொழூஉக்கண்
கடுப்ப வடுச்சொ
னீங்கிய வயங்கிய வருணத்
| |
(தேர்கள்)
328 - 344 : மருங்கு.........வருணத்
| | (பொழிப்புரை) பக்கம்
ஒன்றிற்கு இரண்டு வரிசை மணிகள் பதித்த புடைப்புகள் நிரல்பட ஒருங்கே
ஒளிவீசா நிற்பவும், நான்கு முகப்புகளினும் அகத்திடப்பட்ட தூய்மைசெய்த
தோல் போர்த்தப்பட்ட இடத்தையுடைய செவ்விய தண்டுகளையுடைய தோல்
மணைப்பலகை பரப்பப்பட்ட ஓவியம் பொறித்த இருக்கையினையும்
ஒன்றோடொன்று இணைந்த துடைமரங்களையும், பொற்சங்கிலி பொலிவுற்ற பூவேலை
செய்த துகிற்கச்சையையுமுடையனவும் கத்திகை மாலையின்கண் சிந்துகின்ற
மணிகள் கட்கம் என்னும் உறுப்பிற் புடைத்துத் தெரிக்கப்படுவனவும்
சதுரப்பாடுடைய நம்பிமார் பக்கத்தே கட்டிவைத்தனவும் காட்டகத்தே
கொள்ளப்பட்டனவும் குலைந்தனவும் ஆகிய சாமரைகளையுடைய உச்சியை உடையனவும்,
படைசெல்லுங்கால் தூசிப்படையிலே தாளகதியிலே அழகாகச்
செல்லும் செலவை யுடையனவும், அச்சுத்திரட்டும் புலமையுடையோர்
சிறந்த அளவினைக் கொண்டு அமைக்கப்பட்டனவும் நுனியிலே கட்கம் என்னும்
விலங்குருவம் பெறச் செய்த திண்ணிய நுகத்தடியின்கண் பிடரி மயிர் கொய்து
மட்டம் செய்யப்பட்ட இணைக்குதிரைகளை உடலோடு உடல் பொருந்தும்படி
பூட்டப்பட்டு ஒரு தேர்க்கும் மற்றொரு தேர்க்கும் இடைவெளி
விட்டுப் பூட்டப்பட்டன வாயினும் ஒன்றனோடு ஒன்று ஒன்றி இயங்கிச்சென்று
ஒன்றனோடு ஒன்று இடையீடின்றித் தொடர்புபடுவனவும் இந்திரசாலஞ்செய்வோர்
பிறர்க்குப் புலப்படாதபடி ஒன்றனோடு ஒன்றனைக் கோவை செய்த நாழிகையுடைய
கொழுக்களை ஒப்பனவும்.பழிச்சொல் நீங்கிய விளங்கிய குலத்திற் பிறந்தவரும் பிறர் இடித்துரைக்குஞ் சொற்களைக் கேட்க ஒருப்படாத மானமுடையவரும், இலக்கணப்படி தொழிலாற்றுபவரும், அகத்தே பொருந்துமாறு கோக்கப்பட்ட முகவாரினைக் கைக்கொண்டு ஊரும் வலிய தொழிலையுடையவரும் ஆகிய பாகர்கள் ஏறி நிற்பனவும், ஆகிய ஒப்பனை செய்யப்பட்ட நெடிய தேர்களும், தம்மைப் புறஞ்சூழ்ந்து வாரா நிற்பக் காற்றை ஒத்த செலவினையுடைய வேறுபல புரவிகளையும் களிற்றியானைகளையும் பரப்பிக் கொண்டு, பிரச்சோதனமன்னன் மக்கள் அப்படைநாப்பண் வாராநிற்ப, அழகிய சிவந்த கொடிகளைத் தெருக்களிலே பரப்பிப் போரின்கண் மிகுதற்குக் காரணமான மாலையுடனே அப்படையுடனே கூடி உதயணனும் பிறருமாகிய நம்பிமார் சென்று அத்திருநீர்ப்பொய்கை மருங்கின் மன்னவன் இருந்த குளிர்ந்த பொழிலாகிய சோலைக்கண் சென்று தங்குவாராயினர் என்க.
| | (விளக்கம்) தேர்களின்
வண்ணனையாக வருகின்ற இப்பாடற் பகுதியில் அத்தேரின் உறுப்புக்களின்
பெயராக வருகின்ற பல சொற்கட்குப் பொருள் நன்கு விளக்கமாகத்
தோன்றவில்லை. இப்பகுதியை நுண்மதியுடையோர் ஆராய்ந்து பொருள்கோடல்
நன்றாகும்.
|
|