உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
39. புனற்பாற்பட்டது
 
         
          கண்டொரு பாணியிற் கடல்கிளர்ந் ததுபோற்
          பல்படை மொய்த்த மல்லற் பெருங்கரை
    30    மழைமலைத் தன்ன மாணிழை மிடைந்து
          வம்புவிசித் தியாத்த செம்பொற் கச்சையர்
          மாலை யணிந்த கோல்செய் கோலத்துப்
          பூப்போ துறுத்த மீப்பொற் கிண்கிணி
          இடுமணிப் பெருநிரை நெடுமணிற் கிடைஇ
    35    இரும்புறம் புதைய வெழின்மறைந் திருந்த
          கருங்காற் கானத்துக் கண்மணிக் குழாத்திடை
          ஏற்றரி மாவின் றோற்றம் போல
          மின்னிழை மகளிரொடு மன்னவன் றோன்றி
 
        28 - 38: கண்டு.........தோன்றி
 
(பொழிப்புரை) வேந்தனது எழுச்சிகண்டு ஒரே காலத்தில் கடல் பொங்கி எழுந்தது போன்று பல்வேறு படைகளும் வந்து மொய்த்த வளப்பமுடைய அப்பொய்கையினது ஒரு கரையின்கண்ணே, நீராடற்கு ஏற்புடைய மாட்சிமையுடைய அணிகலன்களை அணிந்து கொண்டு அரைக்கச்சினாலே இறுகக் கட்டிய பொன்னாடையையுடையராய், மாலைகளை அணிந்தவராய்த், திரட்சியாகச் செய்த அழகோடு பூத்தொழிலும் செய்யப்பட்ட பரலாக மணிகளிடப்பட்ட தம் கிண்கிணிகளைப் பெரிய நிரல்களாக நெடிய அக்கரையின்கண் போகட்டு முகில்கள் நெருங்கினாற் போன்று அம் மழையினது கரிய கால்போன்ற தமது கூந்தற் காட்டினாலே தமது பெரிய முதுகுப்புறம் மறையா நிற்பத் தமது அழகினை மறைத்திருந்த தமது கண்ணின்மணி போன்ற தோழியர் குழாத்திடையே இருந்த மின்னும் அணிகலன்களையுடைய தேவிமாரோடு பிரச்சோதன மன்னன் பெடையரி மான் கூட்டத்தே அரிமான் ஏறுபோற்றோன்றி என்க.
 
(விளக்கம்) பாணி - காலம். நீராடற் பொருட்டுக் கிண்கிணி களைக் களைந்து மண்ணிலே போகட்டனர் என்க. மழைமலைத்தன்ன கருங்கால் கானத்து எனஇயைத்துக் கொள்க. வம்பு - அரைக்கச்சு. செம்பொற் கச்சை - பொன்னாடை. இடுமணிக் கிண்கிணி என மாறுக. கோல் - திரட்சி. கிடைஇ - போகட்டு. கண்மணிபோன்ற தோழியர் குழாத்திடை என்க. ஏற்றரிமா என்றதற்கேற்பப் பெடை யரிமான் குழாம் போன்ற மகளிரிடையே என்றும் கூறிக் கொள்க.