உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
39. புனற்பாற்பட்டது
 
           செம்பொற் புரிசை வெண்சுதை மாடத்
          துழைக்கலம் பரப்பி யுருவிய மகளிரொ
          டிழைக்கல நிறீஇ யில்லீ வோரும்
    60    ஆலைக் கரும்பு மரியுறு செந்நெலும்
          பாளைக் கமுகின் படுவுஞ் சுட்டிப்
          புயல்சே ணீங்கினும் பூவளங் குன்றா
          வயலுந் தோட்டமும் வழங்கு வோரும்
          நாகுசூ னீங்கிய சேதாத் தொகுத்துக்
    65    குளம்புங் கோடும் விளங்குபொன் னுறீஇத்
          தளையுந் தாம்பு மளைகடை மத்தும்
          கழுவுங் கலனும் வழுவில பிறவும்
          பைம்பொனி னியன்றவை பாற்பட வகுத்துக்
          குன்றாக கோடி கொடுத்துவப் போரும
 
        57 - 69: செம்பொற்...........உவப்போரும்
 
(பொழிப்புரை) செம்பொன்னாலியன்ற மதிலையும், வெள்ளிய சுதை தீற்றிய மாடத்தையும் உடைய இல்லத்தையே காணிக்கையாகக் குறித்துக் கூறி, அவ்வில்லத்தே வாழுவதற்கு வேண்டிய கலம் முதலிய பொருள்களை யும் பரப்பிவைத்து அழகிய மகளிரை அணிகலன்களோடு நிறுத்திவைத்து அப்பொருள்களோடு ஒருசேர வழங்குவோரும், வேறுசிலர், ஆலையிலிடற் குரிய பருவமுடைய கரும்புகளோடும், அரிதற் பருவமுற்ற செந்நெற் கதி ரோடும் உள்ள கழனிகளையும், பாளை ஈன்றுள்ள பருவத்தையுடைய கமுக மரங்கள் நிறைந்த படுகைகளையும், தக்கிணைப் பொருளாகக் குறித்துக் கூறியும், மழை வறந்த காலத்தும் நிலவளங்குன்றாத கழனிகளையும்,தோட்டங் களையும் குறித்துக் கூறியும் வழங்குவோரும், வேறுசிலர் பாலுண்ணலை விட்ட கிடாரிகளும் கறவையான்களும் ஆகிய சிவப்பு ஆன்கள் பலவற்றையும் தொகுத்து அவற்றின் குளம்புகளினும் கொம்புகளினும் பொன்னணிகலன்களை யிட்டு அவற்றிற்கு வேண்டிய தளையும் தாம்பும் வெண்ணெய்கடையும் மத்தும் கழுவும் கறவைக் கலனும் குற்றமற்ற பிறவுமாகிய கருவிகளையும் பசிய பொன்னாலே செய்யப்பட்ட பிற கருவிகளையும் கூறுபட வகுத்துவைத்து வழங்கி அவ்வந்தணர் மகிழ்ச்சி கண்டு தாமும் மகிழ்வோரும் என்க
 
(விளக்கம்) இல்லமும் கரும்பும் முதலியவற்றைச் சுட்டிக் கூறி வழங்குவோரும் என்க. ஆலைக்கரும்பு ஆலையிலிடும் பருவமுடைய கரும்பு. அரிதலுறுதற்கேற்ற செந்நெல் என்க. புயல் - மழை. பூ - பூமி. நாகு - பாலுண்ணும் கன்றுப்பருவம். நாகும் சூலும் நீங்கிய ஆன்கள் என்க. சேதாகோடி தொகுத்து - என்க. கோடி என்றது பல என்றவாறு. தளை - கால்பிணிக்குங் கயிறு. தாம்பு - கழுத்திற்பூட்டுங் கயிறு. அளை - வெண்ணெய். கழு - மூங்கிலாற் செய்ததொரு கருவி. கலன் - கறவைக்கலன். பொன்னானியன்றவை. கலன்களும் பிறவும் என்க.