உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
39. புனற்பாற்பட்டது
 
         
    70    இன்னவை பிறவு மென்னோர்க் காயினும்
          உடையவை தவாஅக் கொடைபுரி படிவமொ
          டிலமென் மாக்களை யிரவொழிப் பவர்போற்
          கலங்கொடை பூண்ட கைய ராகி
          வெண்டுகில் பூட்டிய வேழக் குழவியும்
    75    ஒண்படை யணிந்த வண்பரிப் புரவியும்
          உண்டியு முடையுங் கொண்டகஞ் செறித்த
          பண்டியு மூர்தியுங் கொண்டன ருழிதந்
          தத்தணர் சாலையு மருந்தவர் பள்ளியும்
          தந்தற மருங்கிற் றலைவைப் போரும
 
        70 - 79: இன்னவை.........வைப்போரும்
 
(பொழிப்புரை) வேறுசிலர், தம்முடையவையாகிய பொருள்களை யெல்லாம் யாவரேயாயினும் மறாது வழங்கும் விரதத்கோடே தம்பால் வந்து ''யாம் வறியேம்'' என்று கூறி யிரக்கும் இரவலர் பிறரிடஞ் சென்று இனி இரத்தலை ஒழித்துவிடுவார் போன்று அணிகலன்முதலிய அரும்பொருள்களையும் வழங்கா நின்ற கையினை உடையராகி மேலும் வெள்ளாடை அணிந்த யானைக்கன்றுகளையும், ஒளியுடைய சேணம்வைத்த வளவிய குதிரைகளையும், உணவுப் பொருள்களையும், ஆடைகளையும் ஏற்றி உள்ளிடம் நிறைக்கப்பட்ட வண்டிகளையும், பிறஊர்திகளையும், இரவலரைத் தேடித் தேடியாண்டும் திரிந்து வழங்கியும், மேலும் அந்தணர்க்கு உறையுளும் அரியதவத் தோர்க்கு உறையுளும் வழங்கிஅறச்செயலில் தலைப்பட்டு நிற் போரும் என்க.
 
(விளக்கம்) என்னோர்க்காயினும் - யாவர்க்காயினும். தவாஅ - மறாத. படிவம் - விரதம். இலமென் மாக்கள் - இரவலர். இரவு ஒழிப் பவர் - மீண்டும் பிறரிடஞ்சென்று இரத்தலை ஒழிப்பவர். கலம் - அணிகலம். வேழக்குழவி - யானைக்கன்று. படை - சேணம். பண்டி - வண்டி. உழிதந்து - சுழன்றுதிரிந்து. அறமருங்கிற்றலைவைத்தல் - அறச்செயலிலே ஈடுபடுதல்.