உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
39. புனற்பாற்பட்டது
 
         
    80    நிலம்பெய் வோரு நிதிபெய் வோரும்
          களிறுபெய் வோரும் பரிபெய் வோரும்
          பெய்வோர் பெய்வோர் பெயர்வறக் குழீஇக்
          கொள்வோ ரறியாக் குரல ராகி
          மணற்கெழு பெருந்துறை மயங்குபு தழீஇ
    85    வனப்பொடு புணர்ந்த வகையிற் றாகிப்
          புனற்பாற் பட்டன்றாற் பூநகர் புரிந்தென்
 
        80 - 86: நிலம்..........புரிந்தென்
 
(பொழிப்புரை) நிலத்தை வழங்குவோரும், பொருளை வழங்கு வோரும், களிற்றியானையை வழங்குவோரும், குதிரைகளை வழங்கு வோரும், ஆகி இங்ஙனம் வழங்குவோர் வழங்க அவ்விடத்தே மீண்டும் வழங்குவோர் வந்து குழுமி வழங்குதலில் பெயர்த்தலின்றித் தாம் வழங் கும் பொருளை ஏற்கும் இரவலரைக் காணாமல் அழைக்கின்ற குரலை யுடையராகி மணல் பொருந்திய அப்பொய்கைப் பெருந்துறை தோறும் பொருந்தித் தத்தம் உறவினரோடு கூடிய அழகினையுடையராகி விரும்பி அந்நகரமாந்தர் எல்லோரும் நீராடலாயினர் என்க
 
(விளக்கம்) பெய்வோர் - வழங்குவோர். வனப்பு - அழகு. பூநகர் - பொலிவுடைய நகரத்துமாந்தர். புரிந்து - விரும்பி.

39 - புனற்பாற்பட்டது முற்றிற்று.