உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
40. உவந்தவை காட்டல் |
|
5 பனையும் வெதிரும் பாசிலைக்
கமுகும் இனையன
பிறவும் புனைவனர்
நாட்டிக் கிடையும்
பீலியு மிடைவரித்
தழுத்தி மிடைவெண்
டுகிலி னிடைநிலங்
கோலி அரிச்சா
லேகமு மார வள்ளியும் 10
கதிர்ச்சா லேகமுங் கந்துங்
கதிர்ப்ப வம்பப்
படத்துப் பொன்னுருக்
கூட்டி அள்ளிலை
வாழை யகம்போழ்ந்
திறுத்த வெள்ளி
வெண்டிரள் வேண்டிடத்
தூன்றிக் கட்டளை
நாசியொடு கபோதங் காட்டி 15
எட்டிறை யெய்திய விலக்கணக்
காட்சி ஏரணி
யமைந்த வெழுநில
நல்வினை நீரணி
மாடத்து நிலாநெடு முற்றத
|
|
(நீர்மாடத்தின்
சிறப்பு) 5
- 17: பனையும்.........முற்றத்து
|
|
(பொழிப்புரை) நீர்மாடம்
இயற்றுந்தொழில் வல்லுநர் பனையும் சிறு மூங்கிலும் பசிய இலைகளையுடைய
கமுகும் இன்னோரன்ன புறக்காழுடையன பிறவும் ஆகியவற்றாலே
நீர்மாடத்தை இயற்றிப் பின்னரும் நெட்டியும் மயிற்பீலியுங் கொண்டு
இடையிடையே வரிச்சுக்கட்டி இழைகள் நெருங்கிய வெள்ளைத் துகிலாலே
இடைவெளியை மறைத்துச்சுற்றி மான்கண் போன்ற சாளரங்களையும் முத்துமாலையா
லியற்றிய சாளரங்களையும் பொற்கம்பிகளாலியற்றிய சாளரங்களையும்
தூண்களையும் அமைத்து, அவை மேலும் ஒளிவீசித்
திகழும் பொருட்டுப் புதிய படாத்தின்கண் பொன்னிற
ஓவியங்களைத் தீட்டிவைத்துச் செறிந்த வாழையைப் பிளந்து முறித்துக்
கொண்ட வெள்ளிபோன்ற தண்டுகளை வேண்டுமிடமெல்லாம் ஊன்றி
அளவான் அமைந்த நாசியும் கபோதமும் ஆகிய மாட உறுப்புகளையும் தோற்றுவித்து
எட்டுக் கோணம் அமைந்த இலக்கணமுடைய தோற்றமும் எழுச்சியும் எழிலும்
அமைந்த ஏழுதளங்களையும் உடையனவாக இயற்றப்பட்ட நல்ல
தொழிற்சிறப்பமைந்த நீரணி மாடத்தின்கண் அமைந்த நெடிய
நிலாமுற்றத்தின்கண் என்க.
|
|
(விளக்கம்) இது
முதல் உள்ளவை விழாக்காணச் சென்றோர் ஆங்காங்குத் தாங்கண்ட இனிய
காட்சிகளை நண்பர்க்குக் காட்டிக் கூறுவனவாக அமைந்துள்ளன. இஃது (5-25)
ஆங்கு ஒருவர் நீரணி மாடத்தைக் கண்டு அதனியல்பெலாங் கூறித் தமருக்குக்
காட்டியபடியாம். வெதிர் - சிறுமூங்கில். கிடை - நெட்டி.
பீலி - மயிற்றோகை. வரித்தழுத்தி - வரிச்சுக்கட்டி. இடைநிலம் -
இடைவெளி. அரிச்சாலேகம் - மான்கட்காலதர். கதிர் - சலாகை; கம்பி.
படம் - படாஅம். கட்டளை - அளவுப்பட்ட. நாசி கபோதம் என்பன
மாடவுறுப்புகள். ஏர் - எழுச்சி. எட்டிறை - எண்கோணம்.
|